வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்

75

இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வர்த்தக சமூகத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், வர்த்தக சமூகத்தினருடன் ஜனாதிபதி புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார்.

பொருளாதார சுபீட்சத்திற்கான பாதையில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைத் தொடர இலங்கை எதிர்பார்க்கிறது என்றும், இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நிதிக் கொள்கை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. கேரளாவில் இருந்து இலங்கைக்கு வியாபாரம் செய்ய வந்த வரலாறு நமக்கு உண்டு. நவகமுவில் உள்ள பத்தினி ஆலயம் கேரள மக்கள் இந்நாட்டிற்கு வந்து வர்த்தகம் செய்யும்போது கட்டப்பட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஆசியப் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது. ஆனாலும், மேற்கு ஆசிய நாடுகளும் பலமாக மாறியிருப்பதும் சிறப்பு வாய்ந்தது. இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாட்டுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் நன்மை பயக்கும். பிரதமர் மோடி மேற்கொண்ட நிதிக் கொள்கையால், பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற முடிந்தது. அந்த நிதிக் கொள்கைகள் இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்துக்கும் உதவுக்கூடியதாக அமைந்துள்ளது.

நான் இலங்கையை மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு கொண்டு செல்லவே விரும்புகிறேன். பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் இலங்கையின் பொருளாதார நிலையை வலுவான நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கு சட்டவிதிகள் அவசியம். போட்டி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான சட்டங்களை எதிர்காலத்தில் சீர்திருத்த எதிர்பார்க்கின்றோம்.

நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த, இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இரு நாடுகளுக்குமிடையில் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு அதற்கான துறைகளை அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.

இலங்கையில், இந்திய ரூபாயின் புழக்கம் குறித்து இங்கு கூறப்பட்டது. இந்திய ரூபாய் மட்டுமல்ல டொலரும் புழக்கத்தில் இருந்தால் அது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையும். இலங்கையில், இந்திய ரூபாய் புழக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், அது உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும். அது தொடர்பான அவசர சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ”இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்க முடிந்துள்ளது. அது இலங்கை மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். இலங்கை மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அந்த மக்களுடன் இந்தியா இருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் உட்பட வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கியது. இலங்கை, தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்றே கூற வேண்டும். நிதி நெருக்கடியின் போதும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரங்களை ஆரம்பித்து இலங்கையின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே ஆதரவளித்துள்ளார். இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன். இது இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்றே கூற வேண்டும்.” என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, துறைமுகங்கள், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முப்படை பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
14-07-2023

Join Our WhatsApp Group