அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அவசர அறிவிப்புகளின் அடிப்படையில் அவசர தேவையில்லாத சில பணிகளுக்காக வாரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இணையவழி சந்திப்புகளில் பங்கேற்பதன் மூலம் பிரதேச செயலகங்களின் வழமையான செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோகா தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அலுவலக செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுவதாகவும் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இணையவழி சந்திப்புகளை நடத்தும் போது பிரதேச செயலாளர் அலுவலகங்களின் கடமைகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் பொது தினத்தை தவிர வேறு ஒரு நாளை பயன்படுத்துமாறு செயலாளர் அறிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கூட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அவசர அறிவித்தல்களின் அடிப்படையில் இணைய ஊடாக நடத்தப்படும் கூட்டங்களினால் தமது கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் ஒன்றியம் அரச நிர்வாக அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.