நேட்டோ உச்சி மாநாடு – புறக்கணிக்கப்பட்டாரா உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

16

நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனியாக நிற்பது போன்ற படம் தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்துள்ளது. இந்த படத்தினை பார்த்த சர்வதேச ஊடகங்கள் உலகத் தலைவர்கள் ஜெலென்ஸ்கிக்கு புறமுதுகு காட்டிவிட்டதாக சர்ச்சை எழுப்பியுள்ளனர்.

லித்துவேனியாவில் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் உக்ரைனுக்கு நேட்டோ அழைப்பு விடுக்காத பட்சத்திலும், உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்காததையடுத்து, ஜெலென்ஸ்கி டுவிட்டர் பதிவொன்றில் நேட்டோவை சாடியுள்ளார்.

அதில் நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்த தாமதத்தை வைத்து பார்த்தால் உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க தயாராக இல்லை என்று தெரிகிறது.

2008 ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று குறிப்பிடவில்லை. தற்போது வில்னியஸில் நடக்கும் நேட்டோ அமைப்பு நாடுகளின் மாநாட்டில் சில முக்கிய விஷயங்கள் உக்ரைன் இன்றி விவாதிக்கப்பட உள்ளதாக எங்களுக்கு அறிகுறிகள் தெரிகின்றன.

இந்த மாநாட்டில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நோட்டோவில் இணைவதற்காக அல்ல. நிச்சயமற்ற தன்மை என்பது பலவீனத்தை குறிக்கும். இதுகுறித்து வில்னியஸ் மாநாட்டில் நான் பேச இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஜெலென்ஸ்கியின் இந்த கருத்து பகிர்வை தொடர்ந்து நேட்டோ பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேட்டோ மாநாட்டில் ஜெலென்ஸ்கியின் தனிப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் ஜெலென்ஸ்கி தனியாக நிற்பதைக் காணலாம். ஜெலென்ஸ்கியின் மனைவி ஓலேனா ஜெலென்ஸ்கா ஒரு பிரதிநிதியுடன் தொடர்புக்கொள்வதை போல் உள்ளது.

இதனையடுத்து நேட்டொ மாநாட்டிலிருந்த பலர் இந்த படத்தை டுவீட் செய்யத் தொடங்கியுள்ளனர். அதில் முக்கியமாக நேட்டோ மாநாட்டில் ஜெலென்ஸ்கியின் பங்கு ஒரு புகைப்படத்தில் முழு சாராம்சமாக தெரிகின்றது என தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் நோட்டோ அமைப்புடன் இணைந்ததாக நேட்டோ அறிவிக்கும் பட்சத்தில், நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக கூட்டாக போரை அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group