நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிப்பாத மலைக்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள நாகதீப பௌத்த விகாரையில் அமைக்கப்பட்டுள்ள 50அடி உயரமான புத்தர் சிலையை சூழ்ந்து குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் வீசும் கடும் காற்று காரணமாக குளவிகள் பல திசைகளை நோக்கி பறகிக்கின்றன. இதனால் தாம் குளவிக்கொட்டுக்கு உள்ளாக கூடுமென்ற பீதியில் வாழ்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
சிவனொளிப்பாத மலைக்கு தரிசனம் செய்ய உள்நாட்டு யாத்திரிகர்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகைதருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் இந்த விகாரைக்கு வருகைதருவதுடன் 50அடி உயரமான புத்தர் சிலையையும் பார்வையிடுகின்றனர். இந்த குளவிக்கூடுகள் காரணமாக குளவிக்கொட்டுக்கு இலக்காகும் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி இங்குள்ள குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலையக பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்காகும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தீர்வுகள் எதனையும் உரிய அதிகாரிகள் முன்மொழியவில்லை.