இந்திய உயர்ஸ்தானிகரை இன்று சந்திக்கிறது சி.வி.விக்னேஸ்வரனின் அணி

66

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது தொடர்பில் இந்தியா இலங்கைக்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கடிதமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இணைந்து அனுப்பவுள்ளனர்.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இருக்கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கடிதத்தை இன்று இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவை சந்தித்து கையளிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

ஜனாதிபதி தமது விஜயத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடவுள்ளன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கான அழுத்தத்தை இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு கொடுத்துவரும் சூழலில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான அழுத்தத்தை பிரதமர் மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென வடக்கில் உள்ள பல தமிழ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் ஊடாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதமர் மோடிக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இக்கடிதத்திலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பவுள்ளனர். இந்தக் கடிதத்தை இன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவை சந்தித்து கையளிக்கவுள்ளனர்.

Join Our WhatsApp Group