இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்

101

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்திய  மூன்றாவது  வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் ஆரம்பமாகிய இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதற்கமைய, அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், இருபதுக்கு இருபது போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நேற்றைய தினம் டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான  முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. அதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி 64.3 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஆலிக் அதானஸ்  47 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில்  இந்தியா அணி  சார்பில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும் , ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் , சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து  தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 80 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா அணி சார்பில்  ஜெய்ஸ்வால் 40 ஓட்டங்களுடனும் , ரோகித் சர்மா 30 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Join Our WhatsApp Group