இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் மலையேறச் சென்ற 12 மலேசியர்களைக் காணவில்லை

18

பருவமழை பெய்துவரும் இந்தியாவின் மலைப்பிரதேசங்கள் அடங்கிய மாநிலத்தில் காணாமல் போனதாக நம்பப்படும் குறைந்தது 12 மலேசியர்கள் தேடப்படுகின்றனர்.

புதுடில்லியிலுள்ள மலேசிய உயர் ஆணையம் இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தத் தகவலை மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை வழி வெளியிட்டது.காணாமல் போன அவர்கள் இமாச்சல பிரதேசத்திலுள்ள ஹம்ப்தா பாஸ் (Hampta Pass) எனுமிடத்தில் துணிகர மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அவர்களது குடும்பத்தினர் ஆணையத்தின் உதவியை நாடியுள்ளனர்.இந்தியாவின் வடக்கே பெய்துவரும் கனத்த மழையால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு குறைந்தது 31 பேர் உயிரிழந்துவிட்டனர். நூற்றுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.சில இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதனால் பயணத்தைத் தொடர முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்புக் குழுவினரின் வருகைக்காகக் காத்திருக்கின்றன.இப்போதைக்கு 50 விழுக்காட்டு சுற்றுப்பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக இமாச்சல முதல்வர் கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group