ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு – ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

39

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவமானது ‘வழிபாட்டுச் சுதந்திரத்தை’ மீறுவதாகும், அது ‘கருத்துச் சுதந்திரத்தைப்’ பறிப்பதாக விளங்கக் கூடாது என்றும், வழிபாடு ஒரு பூரண உரிமை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மௌனம் சாதிப்பது குறித்து கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; “எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரம் என்று கருத முடியாது. அதற்கு வரம்புகள் உண்டு. இது தெளிவாக வழிபாட்டு சுதந்திர பிரச்சினை. குர்ஆனில் பல முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

மனித உரிமைகளை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுப்படுத்த முடியாது என்றும், உலகளவில் அனைவருக்கும் பொதுவானது என்றும், தாம் ஒரு பௌத்தராக இருந்தாலும், தாம் உலகின் அனைத்து மதங்களையும் மதிக்கிற ஒருவர் என்றும், மேலும் அனைத்து மதங்களும் இறுதியில் சிறந்த விஷயங்களைக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Join Our WhatsApp Group