தாய்லாந்தில் கோடீஸ்வரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்த கொடூரம்

26

ஜெர்மனி நாட்டை சேர்ந்த கோடீசுவரரான ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் (வயது 62) தாய்லாந்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்துள்ளனர்.

கிழக்கு தாய்லாந்தில் மேக்கின் ஜெர்மன் நண்பர் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டிலிலுள்ள பிரீசரில் சிறு பைகளில் மேக்கின் உடல் துண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மேக்கின் உடல், நேற்று 11:00 மணியளவில் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக, நாங் ப்ரூ பகுதி காவல்துறை தலைவர் டாவி குட்தாலெங் தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டின் பட்டயா நகரில் தனது 24-வயது மனைவியுடன் வசித்து வந்த மேக், ஜூலை 4ம் தேதி ஒரு வியாபார சந்திப்பிற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்திருக்கிறார்.அவரை கண்டுபிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் பரிசு தருவதாக அறிவித்து அவர் குடும்பம் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், கடைசியாக அவர் ஒரு கருப்பு பென்ஸ் காரில் பட்டயா நகரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாங் ப்ரூ நகரில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு அருகே நேற்று முன்தினம் அவர் கார் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. தடயங்கள் எதுவும் கிடைத்து விடக்கூடாது என அந்த கார் முழுவதுமாக ‘சுத்தம்’ செய்யப்பட்டிருக்கிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் காணாமல் போயிருப்பதுடன் அவர் வங்கி கணக்கிலிருந்து பெரும் அளவு பணம் காணாமல் போயிருப்பதையும் சேர்த்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.”இந்த வழக்கு சொத்துக்கள் தொடர்பானது என தோன்றுகிறது.

மேக்கிற்கு சொத்துகள் இருப்பது குற்றவாளிக்கு தெரிந்திருக்கிறது. குற்றவாளி மேக்கை தனிப்பட்ட முறையில் அறிந்தவரா, இல்லையா? என்பதை துப்பறியும் அதிகாரிகள் இனி கண்டுபிடிக்க வேண்டும்” என்று தாய்லாந்தின் காவல்துறை துணைத் தலைவர் கூறினார்.இந்த கொலை தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

Join Our WhatsApp Group