சர்ச்சைக்குரிய மயக்க மருந்து பாவனையிலிருந்து நீக்கம் – புதிய மருந்து நாளை நாட்டுக்கு

61

சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கு மாற்ற மருந்தாக புதிய மயக்கமருந்து நாளை நாட்டை வந்தடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாவனைக்கு எதவாத பல மருந்துகளின் தடைகளே புதிய மருந்துகள் இறக்குமதி செய்ய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த மருந்துகள் நாட்டை வந்தடையும் பட்சத்தில் மிகவும் விரைவாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசேரியன், ஹேர்னியா சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அண்மையில் பதிவானது.

மேலும், மயக்கமடையச் செய்வதற்காக Bupivacaine என்ற மயக்க மருந்தினை பயன்படுத்திய பின்னர் அவர்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தெரியவந்தது. மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் 109 ஆவது பிரிவினை பயன்படுத்தி, பதிவு செய்யாமலேயே குறித்த மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

109ஆவது பிரிவிற்கு அமைய, உயிரைப் பாதுகாப்பதற்கு அல்லது தொற்றுநோயை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விசேட நிலைமைகளின் போது தேசிய அவசர நிலைமையினை கருத்திற்கொண்டு, தேசிய பாதுகாப்பிற்காக ஒரு தொகை மருந்தினை இறக்குமதி செய்வதற்கு மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சட்டத்திற்கமைய, அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கை அல்லது சிபாரிசு அவசியமானதாக அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய Bupivacaine Hydrochloride in dextrose என்ற மயக்கமருந்து இந்திய நிறுவனம் ஒன்றில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group