நாளாந்த பால் தேவையின் 60% உற்பத்தி வீழ்ச்சி : கோபா குழுவில் புலப்பட்டது

21

• இனப்பெருக்க நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 38 ஆடுகள் இறந்துள்ளமை தெரியவந்தது.

• கரந்தகொல்லை கால்நடை வளர்ப்பு நிலைத்தின் டிப்ளோமா பாடநெறியில் பதிவுசெய்த மாணவர்கள் பாடநெறியை இடையில் விட்டுச்செல்வது தொடர்பில் ஆராய்வு

• கால்நடை இனப்பெருக்கம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வு

இந்நாட்டின் நாளாந்த பால் தேவையின் 40 % தற்பொழுது உற்பத்தி செய்யப்படுவதாகவும், 60 % பால் உற்பத்தி குறைவாகக் காணப்படுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் புலப்பட்டது.

அதற்கமைய, பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கோபா குழுவின் தலைவர் வினவியத்துடன், ஒரு நாளைக்கு 100 லீட்டர்கள் உற்பத்தி செய்யக்கூடிய 15,000 பண்ணைகளை உருவாக்குவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதில் சுமார் 2000 பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பான தேசியத் திட்டமொன்று தயாரிக்கப்படுவது முக்கியமானது என கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இது தொடர்பில் இரண்டு வாரங்களில் அறிக்கையொன்றை வழங்குமாறும் கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 2019/2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இம்புலத்தண்ட ஆடு இனப்பெருக்க நிலையத்திலுள்ள இறக்குமதி செய்யப்பட 100 ஆடுகளுள் தனிமைப்படுத்தல் காலத்தில் 11 ஆடுகள் உள்ளடங்கலாக 38 ஆடுகள் இறந்துள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஆடுகளை இறக்குமதி செய்வதற்கான கொள்வனவு சபையின் அனுமதி 2017 இல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் இந்த ஆடுகள் 2019 இல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அந்நியச்செலாவணி வித்தியாசத்தினால் 2,311,760 ரூபாய் மேலதிகமாக செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளமையும் இங்கு புலப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை வழங்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார்.

மேலும், கரந்தகொல்லை கால்நடை வளர்ப்பு நிலையத்தின் டிப்ளோமா பாடநெறியில் பதிவுசெய்த மாணவர்கள் பாடநெறியை இடையில் விட்டுச்செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தப் பாடநெறிக்கு சுமார் 100 மாணவர்கள் பதிவு செய்வதாகவும், ஒரு வருடத்துக்கு சராசரியாக 82 பேர் பாடநெறியை தொடர்வதற்கு பதிவு செய்வதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. எனினும், இவற்றில் சுமார் 25 பேர் பாடநெறியை இடையில் விட்டுச் சென்றுள்ளமையும், இந்த ஒவ்வொரு மாணவருக்கும் பாடநெறியை தொடர்வதற்கு சுமார் 2,600,000 ரூபாய் செலவாகுவதாக இதன்போது புலப்பட்டது.

பாடநெறியை தொடர்ந்து வரும் போது வேறு தொழில் கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் பாடநெறியை விட்டுச்செலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இந்த மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் கால்நடை இனப்பெருக்கம் தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், செயற்கைக் கருத்தரிப்பு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கல்வி, பயிற்சி மற்றும் கடமை நோக்கில் வெளிநாடு சென்ற 09 அதிகாரிகள் மீண்டும் சேவைக்குத் திரும்பாமை காரணமாக அவர்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய 17299301 ரூபாய் தண்டப்பணத்தை அறவிடாமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தடுப்பூசி கொள்வனவு செய்யும் போது குறைந்த விலைமனு உள்ள போது அதிக விலைமனு வழங்கிய நிறுவனத்திடமிருந்து 100,000 தடுப்பூசி வாங்கியமையால் 3,995,000 ரூபாய் மேலதிகமாக செலுத்தியுள்ளமை இங்கு புலப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க ஜயந்த கெடகொட, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட,
இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group