சுற்றுலா தலமாக மாறும் நந்திக்கடல்

19

நாட்டின் கடற்கரையோரமாக அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் நந்திக்கடல் கடற்கரையும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடற்கரையை சுற்றியுள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விரைவான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, நாட்டின் கடற்கரையோரத்தில் ஏற்கனவே 24 புதிய சுற்றுலாத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், நாயாறு, நந்திக்கடல் மற்றும் சாந்தகுளம் கடற்கரைகள் புதிய சுற்றுலா வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின், குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது நந்திக்கடல் முக்கிய இடமாக கருதப்படுகின்றது.

நந்திக்கடல் பகுதியிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் உடலை மீட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் வைத்தே முன்னாள் போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை படையினரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வடக்கும் மற்றும் கிழக்கில் தமிழர்கள் இன்று வரையிலும் தொடர்ச்சியாக போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, நந்திக்கடல் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி ஒன்றும் மிக அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group