(ஹற்றன் நிருபர்)
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் நேற்று (09) மாலை 3.30 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அதிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று பேர் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்களே இவ்வாறு பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பஸ்ஸில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.