பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாதது கவலைக்குரிய விடயம்-ஜீ.எல்.பீரிஸ்

14

நாட்டில் கொலைகள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், போதைப் பொருள் போன்ற சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க சென்று விட்டு திரும்பும் போது, சாட்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

ரி.56 ரக துப்பாக்கியுடன் வந்து சுட்டுக்கொல்கின்றனர். இதனால், மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளிக்க முடியாத நிலைமை.

சாட்சியமளித்து விட்டு உயிருடன் வீட்டுக்கு செல்ல முடியுமா?. வீட்டுக்கு செல்லும் போது எவராவது ரி.56 துப்பாக்கியுடன் வந்து சுட்டுக்கொன்று விடுகின்றனர். இதுதான் நாட்டின் தற்போதைய நிலைமை.

அத்துடன் நான்கு நாட்களில் 18 வயதுக்கும் குறைந்த 6 யுவதிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் நாடு முழுவதும் பரவியுள்ளது. பாடசாலை பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இப்படியான காலத்தில் நேர்மையான, வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம். குறைந்தது மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறான நிலையில்,பொலிஸ் மா அதிபர் ஓய்வுபெற்ற போது, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாமல் போனமை கவலைக்குரிய விடயம்.

சீ.டி. விக்ரமரத்னவுக்கு பதில் பொலிஸ் மா அதிபராக பணி நீடிப்பு வழங்கியமை பிறழ்வான நிலைமை.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும்.

இதனை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு நேரடியான பொறுப்பு உள்ளது. அரசியலமைப்பு பேரவை இந்த விடயத்தில் நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் திருடர்களை பிடிப்பது என்பது கனவு எனவும் திருடர்களை பிடிக்க கொண்டு வந்த சட்டமூலத்தை கூட அரசாங்கம் திருடியிருப்பதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group