இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி தனது 86 வயதில் காலமானார்
தனது சொத்துக்களை காதலி உள்பட பலருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868 (100 மில்லியன் யூரோ) தனது காதலியான மார்டா ஃபாசினா (33) என்பவருக்கு விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
பெர்லுஸ்கோனியின் சொத்து மதிப்பு, இந்திய பண மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபாய் (6 பில்லியன் யூரோ) என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெர்லுஸ்கோனி தொடங்கிய ஃபோர்சா இடாலியா (Forza Italia) கட்சியின் துணைத் தலைவரான ஃபாசினாவுக்கு, மார்ச் 2020-ல் பெர்லுஸ்கோனியுடன் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், பெர்லுஸ்கோனி மரணப்படுக்கையில் அவரை தனது மனைவி என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 2018 பொதுத்தேர்தலிலிருந்து இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
பெர்லுஸ்கோனியின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் அவரது இரண்டு மூத்த குழந்தைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோவால் நிர்வகிக்கப்படும். நிர்வாகப் பதவிகளை வகிக்கும் இவர்கள் ஏற்கனவே குடும்ப பங்கில் 53% பங்கு வைத்திருக்கின்றனர்.
இது மட்டுமன்றி தனது சகோதரர் பாவ்லோ என்பவருக்கு சுமார் 900 கோடி ரூபாய் (100 மில்லியன் யூரோ) மற்றும் அவரது கட்சியை சேர்ந்த செனட்டரும், மாஃபியா கும்பலுடனான தொடர்புக்காக சிறைவாசம் அனுபவித்தவருமான மார்செல்லோ டெல்’உட்ரி என்பவருக்கு சுமார் 270 கோடி ரூபாய் (30 மில்லியன் யூரோ) விட்டுச்சென்றிருக்கிறார்.