பேராதனை பல்கலைக்கழக, இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவன் ஒருவர் விடுதியில் தற்கொலைக்கு முயற்சித்து, ஆபத்தான நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக விடுதியில் இரவு நேரத்தில் இவர் தற்கொலை செய்ய முயன்று மயக்கம் உற்ற நிலையில், சக மாணவர்களால் காப்பாற்றப்பட்டு பேராதனை வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Radio graphy கற்கையை தொடரும் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்தபோது மாணவர்களால் காப்பாற்றப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகிடிவதை தொடர்பான விசாரணையின் போது பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து விசாரணை நடத்திய சிஐடி போலீசார், இவரை துப்பாக்கி வைத்து மிரட்டி விசாரணை செய்ததனால் இவர் மிகவும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சிஐடி) அழைக்கப்பட்ட இவர், அங்கும் சுமார் 4 மணி நேரம் விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளதோடு,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியதாக போலீசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்..
இதனால் கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாகிய இவர், பல்கலைக்கழகத்துக்குள் தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறு மூலை யை வசிப்பிடமாக கொண்ட சந்திரகுமார் விதுராஜிதன் என்ற இந்த மாணவனே தற்போது உளவியல் அழுத்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பகிடி வதையில் இவரும் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில், பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் சிஐடியினரால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் இந்த மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.
பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உலகில் இயற்கை எழில் கொஞ்சும் பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழகில் உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் பத்தாவது இடம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதே நேரம், ஏராளமான மாணவர்கள் மன உளைச்சலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.