IPL 2023 | ‘இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாமே’ – பிராவோ கலகல பேச்சு

19

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாம் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ. பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முறையே 2010, 2013, 2015, 2019 சீசன்களில் விளையாடி உள்ளன. அதில் சென்னை ஒரு முறையும், மும்பை மூன்று முறையும் வாகை சூடியுள்ளது.

“இது எனது தனிப்பட்ட ரீதியான உணர்வு. இறுதிப் போட்டியில் எங்களுடன் விளையாடும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்க வேண்டாம் என நான் கருதுகிறேன். (சிரிக்கிறார்) என் நண்பர் பொல்லார்ட் அதை அறிவார். இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ள அணிகளுக்கு எனது வாழ்த்துகள். நாங்கள் எதிர்கொள்ள உள்ள அந்த அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன். அதற்கான ரேஸில் உள்ள அணிகள் தரமான மற்றும் எதிரணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அணிகள் என்பதையும் அறிவேன்” என பிராவோ தெரிவித்துள்ளார்.

இதை வேடிக்கையாக அவர் தெரிவித்திருந்தார்.இப்போது இறுதிப் போட்டிக்கான ரேஸில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் உள்ளன. இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வரும் ஞாயிறு (மே 28) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group