ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன விசேட கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
ஜனாதிபதிகள் இவ்வாறு தங்களது சொத்து விவரங்களை வெளியிடும் பட்சத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் அவர்களது சொத்து விவரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான திருத்த சட்ட மூலத்தை முன்வைக்கிறேன். ஒருநாட்டை சட்டத்தால் மாத்திரம் மாற்ற முடியாது. அதற்கு முன்னுதாரணம் அவசியம்.
இதன்படி, தற்போது சபையில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். எனவே, தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தி முன்னுதாரணத்தை வழங்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில், அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அது முன்னுதாரணமாக அமையும். இவ்வாறு செய்தாலே நாடு மாற்றடமையும். ஊழலை ஒழிக்க முடியாது. ஆனால், குறைக்க முடியும். முறைமை மாற்றத்தையே நாட்டு மக்கள் கோரினர் எனவும் எரான் தெரிவித்தார்.