சீனாவின் வூஹான் நகரில் புதிய ஒற்றைத்தட ரயில் சேவை!

14

சீனாவின் வூஹான் நகரில் புதிய, புரட்சிகரமான ரயில் சேவை.Monorail எனும் ஒற்றைத்தட ரயில்…ஆனால் ரயிலுக்கு அடியில் தடம் இல்லை.மாறாக ஓட்டுநர் இல்லாத அந்த ரயில் வானத்தில் மிதந்து செல்கிறது.கான்கிரீட் பாளத்தின் கீழே பொருத்தப்பட்டுள்ள தடத்தின் வழியாக ரயில் செல்வது கண்கொள்ளாக் காட்சி.

வூஹானின் ஜுய்ஃபெங் மவுண்ட்டன் (Juifeng Mountain) நிலையத்திலிருந்து இந்தத் தொங்கு ரயில் அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.அதிகபட்சம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் தொழில்நுட்ப நிறுவனங்களின் நடுவமான Optics பள்ளத்தாக்கில் இயங்குகிறது.10.5 கிலோமீட்டர் நீள வான்தடத்தில் புதிய ரயில் சேவை செயல்படுகிறது.சீனாவின் முதல் வர்த்தகரீதியான வான்ரயில் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்தில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ளது.

பெரிய நகரங்களுக்கு இடையில் இதனை அறிமுகப்படுத்தலாம்.விமான நிலையங்கள், அதிவிரைவு ரயில் நிலையங்களில் இருந்து சுரங்க ரயில் நிலையங்களுக்கும் மற்ற போக்குவரத்து நடுவங்களுக்கும் இதன்மூலம் மக்களை ஏற்றிச்செல்லலாம்.கட்டுமானச் செலவு ஓரளவு குறைவு என்பதால் சிறிய, நடுத்தர நகரங்களிலும் இத்தகைய சேவையை நிறுவலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.மக்கள் வேலைக்குச் சென்றுவர இதனைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

புதிய ரயில் தடத்தின் கட்டுமானம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஆண்டின் இறுதிப் பகுதியில் நிறைவுற்றது.இவ்வாண்டுக்குள் அது வர்த்தக ரீதியாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.200 பயணிகள் வரை அதில் செல்ல முடியும்.அவர்கள் சன்னல் வழியாக வெளிப்புறக் காட்சிகளைப் பார்ப்பதோடு கீழே பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிப் பாளங்கள் வழியாகவும் நகரைக் கண்டு ரசிக்கலாம்.

Join Our WhatsApp Group