மதுபானம் அருந்தி பஸ் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

18

கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருட்களை பாவித்து பஸ்களை செலுத்திய 15 பஸ் சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில், போதைப்பொருட்களை பாவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பஸ்களை இயக்கும் பஸ் சாரதிகளை கைது செய்யும் வகையில் மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல சாரதிகள் போதைப்பொருட்களை பாவித்து பஸ் மற்றும் ஏனைய வாகனங்களை செலுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதுபானம் அருந்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அல்கோ லைசிர் ட்யூப்களை பயன்படுத்தி கைது செய்து வைத்தியர்களிடம் முற்படுத்தப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை பாவிக்கும் சாரதிகளை பரிசோதிக்கும் முறைமை நாட்டில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் பஸ்களை செலுத்தினால் 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group