தென் ஆப்பிரிக்க அணி உலக சாதனை: 18.5 ஓவர்களில் 259 இமாலய இலக்கை எட்டியது

80

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே Centurion மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி புதிய உலக சாதனையுடன் வெற்றிபெற்றுள்ளது.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை எட்டிப் பிடித்து புதிய உலக சாதனையை தென்னாபிரிக்கா படைத்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஜோன்சன் சார்ள்ஸ் 118 ஓட்டங்களையும் கைல் மயர்ஸ் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்காவின் மார்கோ ஜென்சன் 3 விக்கட்டுக்களையும் பார்னெல் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர், 259 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் 100 ஓட்டங்களையும், ஹென்ரிக்ஸ் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த வெற்றியின் ஊடாக இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை விரட்டிப் பிடித்து வெற்றியீட்டிய சாதனையை தென்னாபிரிக்க அணி படைத்துள்ளது.

அத்தோடு, இருபதுக்கு 20 போட்டியொன்றில் மொத்தமாக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் இது பதிவாகியுள்ளது. இந்த போட்டியில் மாத்திரம் இரு அணிகளாலும் 517 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Join Our WhatsApp Group