விசேட கட்டுரை: ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் யாரை ஆதரிப்பது…? முஸ்லிம் தலைமைகளின் திண்டாட்டம்

32

ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தொடர்ந்தும் அரசியலில் ஸ்திரப்படும் உபாயமொன்றுக்கு ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன உத்தேசித்து வருவதாகத் தெரிய வருகிறது. அவ்வாறு, இவ்வுத்தேசப் பிரகாரம் இவ்வாண்டின் நவம்பரில் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால்,

முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன? வியூகங்கள் எப்படி அமையப்போகின்றன? இவைகள்தான் இன்று எழும் சந்தேகங்கள்.

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், இவருக்குப் பக்கபலமாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே பணியாற்றும்.

இதுவே, முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்படவுள்ள தலையிடி. ராஜபக்‌ஷக்களின் அணிக்குள் நுழைவதற்கு இந்தத் தலைமைகள் குறிப்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவைதான் திண்டாடப்போகின்றன. இம்முறை, வெல்லப்போகும் அணியை ஆரூடம் செய்வதிலுள்ள சிக்கல்கள்தான், இந்தத் திண்டாத்தை தோற்றுவிக்கிறது.

ரணிலை ஆதரிக்கலாம், ராஜபக்‌ஷக்களுக்குப் பின்னாலு ள்ள ரணிலை ஆதரிக்க முடியாது என்பதுதான், முஸ்லிம் காங்கிரஸினதும்,மக்கள் காங்கிரஸதும் நிலைப்பாடுகள்.

அது மட்டுமல்ல, அரசியல் கூட்டுக்கள் அமையவுள்ள விதங்களையும் இப்போது கூற முடியாது. இந்நிலையில் ரணிலை எதிர்த்த வியூகம் தோற்றுப்போனால்,

அடையாளம் தெரியாத அளவுக்கு இக்கட்சிகள் முகவரிகள் இழக்கலாம். எனவே, தென்னிலங்கையை சரியாக நாடிபிடிப்பது, பிடிக்க முடியாவிடின் ஜனாதிபதித் தேர்தலில் நடு நிலை வகிப்பது என்ற தீர்மானத்துக்கு வருவதில்தான், இத்தலைமைகளின் உயிர் வாழ்தலே இருக்கப்போகிறது.தேசிய காங்கிரஸும் இன்னும் தனித்துவ தலைமைகளிலிருந்து சிதறி வந்தோரும் ரணிலையே ஆதரிக்கப் போகின்றனர். இதுவும், தனித்துவ தலைமைகளுக்குத தலையிடியேதான்.

அரசியல் கலாசாரத்தையே அடியோடு மாற்றி, புதுயுகத்தின் நுழைவாயிலுக்குள் நாட்டை நகர்த்தும் ரணிலின் திட்டத்துக்குள், ராஜபக்‌ஷக்களின் அடையாளங்கள் பெரிதாகத் துலங்கப்போவதில்லை. இதனால்,ரணிலுக்கு எதிராக முஸ்லிம்களைத் திசை திருப்புவது எந்தளவு சாத்தியம்? இவைகள் தான், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் தலையிடிகளாகும்.


Join Our WhatsApp Group