வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம்

24

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி அரசாங்க அச்சக பிரதானி கங்கானி கல்பனா லியனகே நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான கடிதங்கள் நிதி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலப்பகுதியில் பகலில் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரவில் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேவைப்படுவதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி கல்பனா லியனகே பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி வாக்குகள் தொடர்பான அச்சடிக்கும் பணிகளுக்காக அரசாங்க அச்சகத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட 500 மில்லியன் ரூபா பணத்தில் 40 மில்லியன் ரூபா மாத்திரமே ரொக்கமாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதிலும், வாக்குப்பதிவு தொடர்பான 250 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அச்சிடும் பணியை அச்சகத் திணைக்களம் பூர்த்தி செய்துள்ளதாக அச்சகத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளினால் வெளியிடப்பட உள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group