முல்லைத்தீவில் மகளிர் தினத்தில் வீதியில் நின்று கதறிய தாய்மார்கள்

8

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டம் நேற்று புதன்கிழமையுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஏழு வருடங்களாக கிடைக்காத நீதியை பெற்றுத்தர ஐ.நா.வே இனியாவது கண் திறந்து பார்எங்க கோரியே சர்வதேச மகளிர் தினத்தில் தாய்மார்கள் பலர் வீதியில் நின்று கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்ட வளைவில் இந்த போராட்டம் நேற்றுக் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதனை பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்ட பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கலந்துகொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐ.நா.வின் மனித உரிமை கூட்டத் தொடரில் இணை அனுசரணை நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும் , உள்ளக பொறிமுறை எதுவும் வேண்டாம், சர்வதேச நீதி விசாரணை வேண்டும் , இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ் தான் பதில் என்றால் கொலையாளிகள் யார் ? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? ,போன்ற கோசங்களை முன்வைத்து கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Join Our WhatsApp Group