பிலியந்தலை பிரதேசத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலியந்தலையில் இருந்து கஹபொல நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணிகளின் பணப்பையொன்றை இருவர் இணைந்து திருட முற்பட்ட நிலையில் அதனை அவதானித்த நடத்துனர் அவர்களை தடுக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது ஏற்பட்ட, வாக்குவாதம் முற்றி, சந்தேகநபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனரை தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது நடத்துனருக்கு உதவ வந்த இளைஞர் ஒருவர் மீது குறித்த கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள், சந்தேகநபர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்றைய சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிலியந்தலை மடபாத பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.