Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புகட்டுரைசிறப்பு கட்டுரை : ஆணைக்குழுக்களை குழப்பி ஆதாயம் தேட முனையும் அரசு

சிறப்பு கட்டுரை : ஆணைக்குழுக்களை குழப்பி ஆதாயம் தேட முனையும் அரசு

yaraglobal

குணா – ceylonsri

சுதந்திர ஆணைக்குழுக்களுக்குள் குழப்பம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்தி, இலக்குகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் உயர்மட்டம் முயற்சிப்பது இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றார்கள். அரசியலமைப்புக்கான 19வது திருத்தம், அதன் பின்பு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புக்கான 21 வது திருத்தம் ஆகியன அரசியலமைப்பில் உறுதிப்படுத்தியுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலவீனப்படுத்துவது, நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் என்பதை மறந்து அரசு செயல்படுவது போல் தெரிகிறது.
நிறைவேற்று அதிகாரத்தின் செயல்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காகவே இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சுயாதீன ஆணை குழுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்த ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழேயே இரண்டு ஆணைக் குழுக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதை பார்க்க முடிகிறது. பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தலைவர் இல்லாமல் ஏனைய உறுப்பினர்களை அழைத்து தனியாக பேசுவதும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து இந்த நேரத்தில் பேசுவதும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு குழப்ப நிலை இருப்பதையே காட்டுகிறது.

நாட்டின் இறைமை கேலிக்குள்ளாவதையும், கேள்விக் குறியாவதையும் தடுக்கும் நோக்கிலே சுதந்திர ஆணைக்குழுக்கள் கொண்டு வரப்பட்டன. அரசியலமை ப்பின் 19 மற்றும் 21 ஆவது திருத்தங்கள் என்பன இந்த ஆணைக்குழுக்களின் சுதந்திரச் செயற்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மக்களின் ஆணை மற்றும் அரசியலமைப்புக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளித்துச் செயற்படுவதே ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கும். இந்த அரசியலமைப்பிலிருந்து மீறி செயல்படும் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் குழப்ப நிலையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதை ஆளும் தரப்பும் நிறைவேற்று அதிகாரமும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்குள் பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, தேர்தல் ஆணைக் குழுவிலும் கருத்து பேதங்களை உண்டாக்கியுள்ள அரச உயர் மட்டம், தனது இயலாமைகளை மறைப்பதற்கான முயற்சிகளையே முன்னெடுத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், மக்களின் ஆணை வௌிச்சத்துக்கு வந்துவிடும். பொதுவாக இத்தேர்தல், அரசாங்கம் தேவையா? இல்லையா? என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே நோக்கப்படவுள்ளது. இதற்காகவே, இத்தேர்தலைத் தவிர்ப்பதற்கு அரசின் உயர் மட்டம் முயல்கிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகளும் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையிலுங்கூட, தேர்தல்கள் ஆணைக்குழுவை மறுசீரமைக்க அரசாங்கம் முயன்றுள்ளது. ஆணைக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதலின்றி எட்டப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என, அரச தரப்புக் கூறுமளவுக்கு நிலைமைகள் தலைகீழாகி உள்ளன.

இது போன்று சமையல் எரி வாயு, மின்கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விலைகளை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு எதிராகவுள்ள பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இது தொடர்பிலான கைதுகள் எல்லாம், ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்கும் அரசாங்கத்தின் இலட்சணங்களை வெட்டவௌிக்குக் கொண்டு வந்துள்ளன. இதுகூட,இந்த அரசாங்கத்துக்கு பாதகமானதொரு நிலையை ஏற்படுத்தக் கூடும்.
உண்மையில், அரசாங்கம் தனது இருப்பை நிலை நாட்டுவதற்காக எடுத்து வருகின்ற காய் நகர்த்தல்களும் இராஜ தந்திர நடவடிக்கைகளும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த கூடும். இன்றைய நிலையை பார்க்கின்ற பொழுது அதுதான் நாட்டின் நாடி துடிப்பாகவும் இருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்