தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வர-வர.. மனிதனுக்கும் (humans) இயந்திரங்களுக்கு இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஸ்மார்ட்போன் (smartphone) முதல் துவங்கி வீட்டைச் சுத்தம் செய்யும் வேக்யூம் ரோபோட்கள் (vaccum robots) வரை, இப்போது சில இயந்திரங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்குள்ளும் நுழைந்துவிட்டன.
சில நாடுகளில் மனிதர்கள் பார்க்க வேண்டிய வேலைகளை இப்போது ரோபோட்கள் (robots) தான் செய்கின்றன. இது ஒரு பக்கம் வியக்கத்தக்க விஷயமாக இருந்தாலும், மறுபுறம் மனித வாழ்க்கையை ரோபோட்கள் மெல்ல-மெல்ல ஆதிக்கம் செய்யத் துவங்கிவிட்டன என்பது தான் உண்மையாக இருக்கிறது. மனிதர்களின் வேலையை மெல்ல-மெல்ல ரோபோட்கள் களவாட துவங்கிவிட்டன.
இப்படிப் பல விதமான வேலைகளைச் செய்வதற்கு, பல புது மாதிரியான ரோபோட்களை மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அப்படியான, ஒரு புதிய கண்டுபிடிப்பு தான் பைபெடல் ரோபோ அட்லஸ் (Bipedal Robot Atlas). ஒவ்வொரு முறையும் பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) ஒரு புதிய வீடியோவைப் வெளியிடும் போது, அதில் பல விதமான ரோபோட்கள் மற்றும் தொழில்நுட்பம் (technology) பற்றி காண்பிக்கப்படுகிறது. இது டெக் (tech) ஆர்வலர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது.அப்படி சமீபத்தில் பாஸ்டன் டைனமிக்ஸ் வெளியிட்ட வீடியோவில் ஒரு ரோபோட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பறக்கும் ரோபோவா? அல்லது சிறுத்தை போல ஓடும் ரோபோவா? என்று பல யோசனைகள் உங்களுக்குள் எழுந்தாலும், இது மனிதர்களுடன் நெருக்கமாக வேலை செய்யும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஹுமனாய்டு (humanoid) ரோபோட் என்பதே உண்மையாகும்.
போஸ்டன் டைனமிக்ஸின் புதிய வீடியோவில் ஒரு கட்டுமான தளத்தில் திறமையாக வேலை செய்யும் ரோபோட்டை காண்பித்துள்ளது. இந்த வீடியோவை (video) நீங்கள் முழுவதுமாக பார்த்தால், இந்த ரோபோட் என்னவெல்லாம் செய்கிறது என்று வியப்பில் மூழ்கிவிடுவீர்கள்.
எதிர்காலத்தில் பல கட்டுமான தளங்களில் இந்த அட்லஸ் ரோபோக்களைப் (Atlas robot) நாம் பார்க்கப்போகிறோம் என்பது தான் இறுதி முடிவாக இருக்கப் போகிறது.
இந்த அட்லஸ் ரோபோட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி கட்டுமான செட்டிங்கில் பொருட்கள் மற்றும் கருவிப் பைகளைத் (tools bag) திறம்படக் கையாள்கிறது.
Hyundai நிறுவனத்திற்கு சொந்தமான இந்த Boston Dynamics உண்மையில் இரு கால் கொண்ட ரோபோக்கள் மூலம் அதன் இலக்கை அடைய பார்க்கிறது. இதற்காக நீண்ட காலமாக பல சோதனைகளை செய்து வருகிறது. முதல் முறையாக மனிதர்களுடன் இந்த ரோபோட்டை வேலை செய்ய வைத்து, அதன் செயல்பாட்டை நிறுவனம் சோதனை செய்துள்ளது. வரும் காலத்தில் நிறுவனம் இந்த ரோபோட்களை கட்டுமான தளங்கள் மற்றும் பல இடங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தி வெர்ஜ் (The Verge) சுட்டிக்காட்டியுள்ள படி, இந்த வீடியோவை நிறுவனம் எடிட் செய்துள்ளதாம். இந்த சோதனையின் போது அட்லாஸ் ரோபோட் பல முறை தவறுகள் செய்து, கீழே விழுந்து எழுந்தரித்து மீண்டும் அதற்கு வழங்கப்பட வேலையைச் செய்து முடிக்கப் போராடியதாகக் கூறப்படுகிறது. அசல் வீடியோவில் உள்ள ரோபோட்டின் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ரோபோட் முதல் முறையாக நிஜ வாழ்க்கையில் மனிதர்களுடன், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழலில் அட்லஸ் வேலை செய்தது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டுள்ளது.
hyundai-owned-bipedal-robot-atlas
தற்போது, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ரெச் மற்றும் ஸ்பாட் என்ற இரண்டு ரோபோக்கள் மட்டுமே விற்கப்படுகின்றன.
ஸ்ட்ரெச் என்பது முந்தைய ரோபோட் மாடலாகும்; இது பெட்டிகள் மற்றும் பொருட்களை நகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. பிந்தையது, ஸ்பாட் என்ற ரோபோட் ஆகும். இது கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரு கால் கொண்ட ரோபோவை நிறுவனம் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் போன்ற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட ரோபோட்கள் மனிதர்களுடன் சேர்த்து வேலை பார்க்கத் துவக்கினால், உலகில் உள்ள பல உழைப்பு மிகுந்த தொழில்களுக்கு எதிர்காலம் என்னவாகும்? என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
இனி வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போஸ்டர்களுக்கு பதிலாக, வேலைக்கு ரோபோட்கள் தேவை என்ற போஸ்டர்களை நாம் விரைவில் பார்க்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.