-குணா – ceylonsri
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச பொங்கல் விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒரே குரலில் வௌிப்படுத்திய எதிர்ப்புக்கள், உணர்வுகளின் கொதிப்புக்களாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் அரசியல் வட்டாரங்களில் இதுவே இப்போது பேசுபொருள். இழப்பீடு வேண்டாம் (லஞ்சம்), ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நடந்த கதியைச் சொல்! இதைத்தான் கேட்கின்றனர் தமிழர்கள்.
கடைசி யுத்த விளிம்பில் இராணுவத்திடம் சரணடைந்தோர் மற்றும் பாதுகாப்புக்காக பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டோருக்கு நடந்த கதியை அறிவதே இவர்களது ஆவல். இந்த ஆவல் தமிழ் தலைமைகளுக்கு இல்லை. காரணம், அவர்களது உறவுகள் மற்றும் பிள்ளைகள் இந்நாட்டில் இல்லாததுதான்.

ஒரு சிலர் இருந்தாலும், அவர்கள் போர் பொறிமுனைக்குள் சிக்கியிருக்கவில்லை.
இப்படியான ஒரு நிலையில், இந்த தமிழ் கட்சிகள் இன்று தனித்தனி வழி சென்றிருப்பது ஏன்? தமிழ் தேசியத்தின் அடையாளப் பிரச்சினைகளாகவுள்ள கைதிகள் விடுதலை, காணாமல்போனோர், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் சர்வதேசம் வரை சென்று சாதிக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது. இனியும் தமிழ் அரசியல் சேர்ந்திருப்பது ஆபத்து என்பதை பிரித்தாளும் தந்திரம் புரிந்துவிட்டது. தமிழர்களின் ஏகோபித்த முடிவுதானிது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், சர்வதேசத்தில் பாரிய நெருக்கடியை உருவாக்கும், தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்தும் உள்ளிட்ட பல சிக்கல்களை அவிழ்க்கும் ஆபத்தான கேள்விகள், தமிழர் அரசியலிலிருந்து எழக்கூடாது. அவ்வாறு எழுந்தாலும், அது ஏகோபித்த ஆணையாக இருக்கக் கூடாது. இதற்காகத்தான் இத்தலைமைகள் பிளக்கப்பட்டுள்ளன. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து தென்னிலங்கை அரசுகள் தப்பிக்க,த மிழர்களின் இந்தப்பிளவுகள் இனி உதவப்போகிறது.
இதுவும் தமிழர்களின் கவலைகளில் ஒன்று.மறுபுறம்,சமாதானத்துக்கான போர், உள்நாட்டு யுத்தம் போன்ற போர்வையில் நடந்த இராணுவ நடவடிக்கைகளில், நடந்ததைச் சொல்லத் தயங்குவதில்தான், தென்னிலங்கை அரசியலே தழைக்கிறது. நாட்டின் ஆட்சித் தலைவர் யாராக இருந்தாலும்,யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லியாக வேண்டும். இந்நிலைப்பாட்டிலிருந்து தமிழ் கட்சிகள் மாறினாலும் தமிழர்கள் மாறவில்லை.

ஒப்படைத்த உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இன்னும் ஊசலாடுகிறதா? இதுபற்றி அறியும் அவர்களது ஆவல் அரசியலுக்கு அப்பாலானது. தேவைக்கேற்ப, தமிழ் தலைமைகள் இவற்றை திசை திருப்பினாலும், தமிழர்களின் உணர்வுகளைத் திருப்பிவிட முடியாது. இழப்பீட்டுத் தொகை என்பது, இவர்களது பார்வையில் உயிர்களுக்கு வழங்கப்படும் இலஞ்சமாகவே உள்ளது. இதனைத் தான் அவர்கள் தேசிய பொங்கல் விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற போதும் வலியுறுத்தினார்கள். பிரதமரிடம் இதனை வலியுறுத்த வந்தவர்கள் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை, கண்ணியமாக கையாளப்பட வேண்டிய விடயம். அமைச்சர்களை அனுப்பி இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
இதனைத் தான், உறவுகளை இழந்து நிற்கின்ற மக்கள் இலஞ்சம் கொடுத்து பிரச்சனையை தீர்க்கலாமென நினைக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள். ஆகவே, யதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசாங்கமும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சனையை கையாள வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களினதும் உலக நாடுகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.