தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பிற்குள்ளும் பிளவு உறுதியாகியுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைத்தன்மை ஏமாற்றமளித்துள்ளமையால் தமிழர் சம உரிமை இயக்கம் கட்சி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2009 இற்கு பின்னரான கள யதார்த்த சூழலில் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, கடந்த 2018 ஆம் வருட உள்ளுராட்சி தேர்தலில் தமிழர் சம உரிமை இயக்கம் மேலும் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவையாக வடக்கு கிழக்கு எங்கும் போட்டியிட்டது.
தற்போது தமிழ்க் கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை சீர்குலைந்து அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றமை கவலையளிக்கின்றது.
எந்த நோக்கத்திற்காக தமிழ்த் தேசியப் பேரவையாக நாம் இணைந்து போட்டியிட்டோமோ அந்த நோக்கங்கள் எட்டப்படாமல் போனமை ஏமாற்றமளிக்கின்றது.
தமிழ்க் கட்சிகள் சிறு சிறு அணிகளாக பிரிந்தமையானது தமிழர்களின் பேரம்பேசும் சக்தியை நலிவடையச் செய்துள்ளது. இதனால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இவ்வாறான களச்சூழலில் தமிழர் சம உரிமை இயக்கத்தின் மத்திய குழு கூடி ஆராய்ந்து பத்தோடு பதினொன்றாக பயணத்தை தொடர்வதில்லை என தீர்மானித்தது.
இதனால், கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எந்த வேட்பாளர்களையும் களமிறக்குவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் மக்களின் சரிநிகர் சமான வாழ்விற்கும் இனத்துவ அடையாளங்களைப் பாதுகாக்கும் பணியிலும் மக்கள் இயக்கமாக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.