** காயமடைந்த காத்தான்குடிக்கு
களிம்பு பூசும் ரவூப்ஹக்கீம்
கிழக்கு முஸ்லிம் அரசியலில் மூத்த அடையாளமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ் புல்லாஹ்வை மீண்டும் உள்ளீர்த்து
கட்சிக்கு புதுத்தெம்பூட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. இவரது வருகையால், அஷ்ரஃப் காலத்து ஆரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கிழக்குச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாரக மந்திரமும், தனித்துவக் கோஷமும் சலித்தும், பொய்த்தும் போயுள்ளதாலேயே, ஹிஸ்புல்லாஹ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீள இணைத்துக் கொண்டதாக
கிக்கின் கள, அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் கடந்தகால செயற்பாடுகள், சலிப்புத்தட்டும் அளவுக்கு இருந்ததால், பழைய பிரபலங்களை உள்ளீர்து கட்சியை உயிரூட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது, ஏனைய போட்டித் தலைமைகளுக்கு எரிச்சலூட்டி உள்ளதாகாவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கிழக்கில் பிரபலங்களைத் தேடும் பணியில் முஸ்லிம் தலைமைகள் ஈடுபட்டுள்ளன.
தனிப்பட்டோரின் பல ஆளுமைகளை வளர்த்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,இன்று தனிப்பட்டவர்களின் ஆளுமைகளால் வளருமளவுக்கு நிலைமைகள் தலைகீழாகி உள்ளன.
உணர்ச்சி அரசியலில் எதுவுமில்லையென்ற விழிப்பு, கிழக்கில் ஏற்பட்டுள்ளதால், முஸ்லிம்களை ஒரேகோர்வையில் பிடித்து வைக்க எதுவுமின்றியுள்ளன இன்றைய தலைமைகள்.
இதனால்தான், ஜனாதிபதித் தேர்தலில்கூட போட்டியிட்டுத் தனித்துவம் தேடிய பிரபல்யம் ஹிஸ்புல்லாஹ்வை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கரம்பிடித்துள்ளது.
.தனிப்பட்ட அந்தரங்கங்களைக் கிளறாமல் அடக்கமாகப் பிரச்சாரம் செய்பவரான ஹிஸ்புல்லாஹ்வை, கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்த காயங்கள் இன்னும் காத்தான்குடி மண்ணில் கீறல்களாக உள்ள நிலையிலே, ஹிஸ்புல்லாஹ் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வைப் பற்றி ஹக்கீம் இப்படிச் சொன்னதை”பிறவியிலேயே முடம் பரிசாரம் பார்ப்பது எப்படி” என்றதை எப்படி மறப்பது என்றும் அம்மண்ணின் மைந்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர்,தனது ஆளுமைகளைப் பல கோணங்களிலும் நிரூபித்த ஹிஸ்புல்லாஹ்வின்
களவோட்டங்கள் முஸ்லிம் தலைமைகளுக்கு கடிவாளமாக இருந்தது. இதனால், கதிகலங்கிய ரவூப்ஹக்கீம்தான், காத்தான்குடியில்தான் இந்தக் கதையைச் சொன்னார்.
காத்தான்குடியை இவரின்றி எவராலும் கைப்பற்ற முடியாதென்ற உண்மை இன்றளவும் நிலைக்கும் நிலையில், ஹிஸ்புல்லாஹ் உள்வாங்கப்பட்டிருப்பது, உள்ளுக்குள்ளிருந்து கழுத்துக்கு கயிறு எறிந்த உரார்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றே அவதானிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் சபையையாவது கைப்பற்றும் கைங்கர்யத்தை இவரூடாகத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யவுள்ளது. மட்டுமன்றி கிழக்குப் பூர்வீகமுள்ள தலைமையின் அவசியம் கிழக்கில் உணரப்படும் சூழ்நிலையில், ஹிஸ்புல்லாஹ்வின் வருகை சிலரது கனவுகளில் கரியைப் பூசியுள்ளதாகவே கருதப்படுகிறது.
கட்சிக்குள் இருந்தவாறே அம்பாறைக்கு அல்லது மட்டக்களப்புக்கு தலைமையைக் கைமாறும் கைங்கர்யங்களில் செயற்பட்ட எம்பிக்களுக்கு, தலைவரிட்ட கடிவாளம் அவர்களது கழுத்துக்களை நெருக்காமல் இருந்தாலும் போதுமானது.
கட்சியின் செல்வாக்கை மீள் நிலைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக்கு முன்னால், ஹிஸ்புல்லாஹ்வின் ஆளுமை முன்னிறுத்தப்பட்டால்,குறுநில மன்னர்களின் குறுக்குவழி ஆசைகள் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.