குணா- Ceylonsri
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கா விட்டால் மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அப்பாவி மக்களுக்கு கொடுக்கும் அச்சுறுத்தலாகவே இதனை பார்க்க முடிகின்றது. இவ்வாறு மக்களை மிரட்டி மின்கட்டணத்தை அதிகரிக்கலாம் என்பது அமைச்சரின் தீர்மானம். மின் கட்டணம் அதிகரிப்பதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே நேரம்,ஆளும் கட்சி,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில், அமைச்சர் கஞ்சன விஜயசேகர, மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அடம் பிடிப்பில் இருக்கிறார். மக்களின் நிலையைப் பற்றி அமைச்சர் சிந்திப்பதாகவோ, அல்லது கருத்தை கேட்பதாகவோ இல்லை. அவர் சொல்வது தான் சரி என்ற ஒரே நிலைப்பாட்டில் இருந்து அமைச்சர் செயல்படுகிறார். நிறைவேற்று அதிகாரத்தினுடைய பின்பலத்துடன் அமைச்சர் தன்னுடைய அடம் பிடிப்பு தனத்தை காட்டுகிறார் என்பதை உறுதியாக ஊகிக்க முடிகிறது. மின் உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தில் இயங்குதல் – மின்கட்டண அதிகரிப்புக்காக அவர் கூறும் காரணங்களாக இருக்கின்றன.
இந்த இரண்டு காரணங்களையும் அமைச்சர் நியாயப்படுத்த முனைந்தாலும், இன்றைய நெருக்கடி நிலையில் மக்களால் தாங்க கூடிய சக்தி இல்லவே இல்லை. மக்களின் இன்றைய நிலையைப் பற்றி அமைச்சரும், அமைச்சரவையும் நிறைவேற்று அதிகாரமும் சிந்திப்பதாக இல்லை. மின்சார சபையை நெருக்கடி நிலையில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதுதான் அமைச்சரவையின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.
முழுக்க முழுக்க ஊழல்,மோசடிகள் மலிந்த இடம் இலங்கை மின்சார சபை. இதனை அமைச்சரும் ஒப்பு கொண்டிருக்கிறார். அமைச்சரவையும் இதனை கருத்தில் கொண்டு உள்ளது. இலங்கையின் கணக்காளர் நாயகம் கூட இந்த நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பாக சுட்டிக்காட்டி இருக்கிறார். ஊழல் மோசடிகளாலும் துஷ்பிரயோகங்களாலும் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் இயங்குகின்ற இந்த நிறுவனத்தை ஈடு செய்ய முற்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், மின் கட்டணத்தை அதிகரித்துத்தான் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று அமைச்சரும் அமைச்சரவையும் எடுக்கின்ற இந்த தீர்மானம் மக்களை பலிக்கடாவாக்கு கின்ற முயற்சியாகும்.
மோசடிகளாலும் தவறான முகாமைத்துவத்தினாலும் ஏற்பட்டிருக்கின்ற இந்த நஷ்டத்துக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் அதனை ஈடு செய்வதாக இருந்தால்,மாற்று வழிகளை கையாள வேண்டும். மக்களை வருத்தி நஷ்டத்தை ஈடு செய்ய முற்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அது தர்மமும் அல்ல. தவறான முகாமைத்துவத்தினாலும் ஊழல் மோசடியினாலும் இழந்து போய் இருக்கின்ற நஷ்டத்தை ஈடு செய்ய, அப்பாவி மக்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கட்டண அதிகரிப்பு முயற்சி, ஊழல் மோசடிக்கு துணை போன ஒரு நிர்வாகத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியே தவிர,வேறொன்றுமில்லை.
இந்த நிறுவனத்துக்குள் இருக்கும், ஊழல் மோசடிகளை தடுக்க அரசாங்கம் முறையான நடவடிக்கையில் இறங்காமல், கட்டண அதிகரிப்பை செய்து அந்த நிறுவனத்துக்கு மேலும் மேலும் நிதியை வாரி வழங்கினால், மோசடி இன்னும் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது….?
அரசாங்கம் சுமார் 75 வீத மின் கட்டண அதிகரிப்பை செய்வதற்கான முயற்சிகளிலேயே இறங்கி உள்ளது. அப்படி செய்வார்களாக இருந்தால், சுமையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி மக்களிடம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தின்ன வழி இல்லாமல் இருப்பவர்களும், தினக்கூலிகளும், அரசாங்க ஊழியர்களும் வாழ முடியாமல் இப்பொழுதும் திண்டாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், மின் கட்டண அதிகரிப்பு, மேலும் சுமையை ஏற்படுத்துவதோடு, மக்களை தற்கொலைக்கு இட்டுச் செல்லும்.
இந்த நிலையை விஞ்ஞான ரீதியாகவும் அரசு சிந்திக்க வேண்டும். “ஒன்றை அமுக்க அமுக்க எதிர் வினைகள் உருவாகும் “. ஆகவே, எழுந்த மானமாக இந்த மின் கட்டணம் அதிகரிக்கப்படுமாக இருந்தால், நாட்டில் அமைதிக்கு பங்கமாகவே அது அமையும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.