உக்குவலைப் பகுதியில், வறுமையின் பிடி தாங்காத சிலர், தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனர். சுமார் ஐந்து இலட்சம் முதல், மூன்று இலட்சம் வரை, இச்சிறு நீரகங்கள் விலைபோயுள்ளன.
கொழும்பிலிருந்து வந்த ஒரு குழு, சுமார் நூறுபேரை ஏமாற்றி, இம்மோசடியைச் செய்துள்ளது. முறையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படாமலே, இவர்களின் சிறுநீரகம் அகற்றி எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் நோய்வாய்ப்பட்டும் உள்ளனர்.
பேசப்பட்ட பணத்தொகயைும் சிலருக்கு வழங்கப்படவில்லை.முற்பணமாக ஒரு இலட்சம் தருவதாக்கூறிய இக்குழு, சிறுநீரகத்தை எடுத்த பின்னர் மீதிப் பணத்தை தருவதாகக் கூறியுள்ளது. பின்னர் சிகிச்சை முடிந்ததும், வாகனத்தில் ஏற்றிவந்து புறக்கோட்டையில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் ஏமாற்றப்பட்டோர் கவலையுடன் தெரிவித்தனர். இம்மோசடி பற்றி ஆராய்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. சிறுநீரக அறுவைச் சிகிச்சை நடாத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பொரளை தனியார் மருத்துமனைக்கு அரசாங்கம் தற்காலிகமாக சீல் வைத்துள்ளது.
வறுமையின் பிடியில் சிக்கிய சில, மலையகக் குடும்பத்தினரே,தங்களது சிறுநீரகங்களை விற்றுள்ளனர். அடிப்படை வசதிகளின்றி பரிதவிக்கும் தங்களது குடும்பத்தின் அவல நிலையை போக்குவதற்கு சிறுநீரகங்களை விற்றதாக இவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு பெற்ற பணத்தில் மலசலகூடங்களை நிர்மாணித்ததாகச் சிலரும், உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை வாங்கியதாகச் சிலரும் தெரிவித்துள்ளனர்.
