புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து இயங்குவது கவலை அளிக்கும் விஷயம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அஜித் தோவல், “ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை நம் அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. ஆப்கன் விவகாரத்தில் நமக்கான முன்னுரிமைகள், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு கவலை இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. நம் அனைவருக்குமானது. குழப்பம் நிறைந்ததாகவும், எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. நிதி உதவிகள்தான் பயங்கரவாதத்தின் உயிர்நாடி. அந்த வகையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டிய கடமை ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இருக்கிறது.