32 பாடசாலைகளில் இருந்து  5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றம் வருகை

15

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நாளில்  அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை
 
பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இன்றையதினம் (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
 
இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளைச் சேர்ந்த 5,000இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.
 
உலகப் பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் கலரியானது கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டதையடுத்து, தீவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களை அவதானிக்க வந்துள்ளனர்.
 
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
கௌரவ சபாநாயகர் அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் கௌரவ சபாநாயகர், பாராளுமன்றச் சபை முதல்வர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட பாராட்டுக்குரிய ஒரு செயல் இதுவென அவர் மேலும் தெரிவித்தார்.
 
நிதியமைச்சரான ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் இதற்குத் தேவையான நிதியுதவியை எவ்விதத் தயக்கமுமின்றி பொதுத் திறைசேரியிலிருந்து வழங்கத் தீர்மானித்துள்ளதானது குறிப்பிடத்தக்க அம்சமாகுமென படைக்கலச் சேவிதர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group