ரியாத்: ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் இளைஞர் நலத்துறை தலைவராக இளவரசர் பைசல் பின் பாத் இருந்தார். அவர், அப்போதைய சவுதி மன்னர் பாத்தின் மூத்த மகன் ஆவார். அவரது அரண்மனையில் தாய்லாந்தை சேர்ந்த கிரியாங்ராய் டெங்காமாங் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நூற்றுக்கணக்கான வீரர்களின் பாதுகாப்பில் இருக்கும் அரண்மனை என்பதால் இளவரசர் பைசல் தனது பாதுகாப்பு பெட்டகங்களை மூடுவது கிடையாது. இது துப்புரவு தொழிலாளியான கிரியாங் ராய்குக்கு தெரிய வந்தது. இதை பயன்படுத்தி அரண்மனையில் இருந்து தங்க நகைகளை திருட அவர் திட்டமிட்டிருந்தார். அதற்கான நேரத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார். இந்த நேரத்தில் இளவரசர் பைசல் குடும்பத்துடன் ஒரு மாத பயணத் திட்டத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார். அப்போது இளவரசரின் படுக்கை அறையில் இருந்த பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து தங்க, வைர நகைகள் மற்றும் வைரங்களை கிரியாங்ராய் திருடினார். அவற்றை துப்புரவு இயந்திரங்களில் மறைத்து அரண்மனை பாதுகாவலர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றார்.
இன்றைய மதிப்பில் திருடப்பட்ட தங்க, வைர நகைகளின் மதிப்பு சுமார்ரூ.164 கோடி. அதில் 50 காரட் நீலநிற வைரம் மிகவும் அரிய வகை வைரமாகும். அரண்மனையில் இருந்து திருடிய நகைகளை சரக்கு சேவை மூலம் தாய்லாந்துக்கு கிரியாங்ராய் அனுப்பி வைத்தார். தாய்லாந்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை கொடுத்து நகைகளை அவரது வீட்டுக்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார். இதன்பிறகு கிரியாங்ராயும் தாய்லாந்துக்கு தப்பிச்சென்றார். ஒரு மாத சுற்றுலாவுக்குப் பிறகு அரண்மனைக்கு திரும்பிய இளவரசர் பைசல், தங்க, வைர நகைகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளில் தாய்லாந்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி கிரியாங் ராய் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சவுதி அரசு சார்பில் தாய்லாந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரியில் தாய்லாந்தின் லம்பாங் பகுதியில் கிரியாங்ராய் கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், திருடிய தங்க, வைர நகைகளை விற்ற இடங்கள், வியாபாரிகளின் முகவரிகளை போலீஸாரிடம் தெரிவித்தார். இதன்பேரில் நகைகள் மீட்கப்பட்டன. ஆனால் 50 காரட் வைரம் மட்டும் கிடைக்கவில்லை.
பின்னர் மீட்கப்பட்ட நகைகள், தாய்லாந்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த நகைகளை சவுதி அரேபிய அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. திருடு போன நகைகளில் 20 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. அந்த நகைகளிலும் பெரும்பாலானவை போலி.
இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் செயல்பட்ட சவுதி தூதரகத்தின் 2 மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதன்பிறகு சவுதி அரசு சார்பில் தொழிலதிபர் முகமது அல் ருவாலி தாய்லாந்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அவரும் திடீரென காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை எந்த தகவலும் இல்லை.
கிரியாங்ராய் திருடிய நகைகளை, வைர வியாபாரி தாராவாடி ஸ்ரீதனாகான் என்பவரிடம் விற்பனை செய்திருந்தார். அந்த வைர வியாபாரி, அவரது மனைவி, மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தாய்லாந்து போலீஸ் மூத்த அதிகாரி சாலோர் கைது செய்யப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரண்மனையில் திருடிய துப்புரவு தொழிலாளி கிரியாங்ராய் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலையானார். அவர் மனம் திருந்தி புத்த பிட்சுவாக துறவறம் பூண்டார். சர்வதேச அரங்கில் ‘புளூ டைமண்ட் கேஸ்’ என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தால் சவுதி அரேபியா, தாய்லாந்து இடையிலான தூதரக ரீதியிலான உறவு முற்றிலுமாக முறிந்தது. தாய்லாந்து தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பாவித்தன. அப்போது சவுதி அரேபிய அரசு, தாய்லாந்து மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
“சவுதி அரேபியாவில் திருட்டு, கொள்ளை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். எனினும் இருநாட்டு உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கிரியாங் ராயை திரும்ப ஒப்படைக்க நாங்கள் கோரவில்லை. திருடிய நகைகள், வைரங்களை மட்டுமே கோரினோம். அவற்றை கூட தாய்லாந்து அரசு வழங்கவில்லை. போலி நகைகளை அனுப்பி ஏமாற்றினர். அந்த நாட்டு போலீஸ் அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. சவுதி இளவரசர் அரண்மனையில் இருந்து திருடப்பட்ட நகைகளை, அதிகாரிகளின் மனைவிகள் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையை கண்டுபிடித்த சவுதி தூதரக அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். சவுதி தொழிலதிபர் காணாமல் போயுள்ளார். வழக்கின் முக்கிய சாட்சிகளும் கொல்லப்பட்டுவிட்டனர். வேறுவழியின்றி தாய்லாந்து உடனான தூதரக உறவை முறித்துவிட்டோம்” என்று சவுதி அரேபிய அரசு குற்றம் சாட்டியது.
இதன்பிறகு கடந்த 30 ஆண்டுகளாகசவுதி அரேபியாவுக்கும் தாய்லாந்துக்கும் எவ்வித உறவும் தொடர்பும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் -ஓச்சா அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அப்போது திருட்டு சம்பவத்தை மறந்து இரு நாடுகளிடையே மீண்டும் அரசியல், பொருளாதார உறவுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 17-ம் தேதி சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறைப் பயணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றார். கடந்த 18-ம் தேதிஅந்த நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, எரிசக்தி தொடர்பாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் இரு நாடுகளிடையே மீண்டும் உறவு துளிர்த்துள்ளது.