Sunday, 27 November, 2022
yaraglobal
Homeகட்டுரைகட்டுரை - தமிழர்களின் புதிய நம்பிக்கை ஆற்றாமைகளாகி விடக்கூடாது

கட்டுரை – தமிழர்களின் புதிய நம்பிக்கை ஆற்றாமைகளாகி விடக்கூடாது

குணா – Ceylonsri

சகலரையும் ஒருதாய் உணவர்வில் இணைக்கும் தீர்வுத் திட்டத்துக்கு ஜனாதிபதி உழைத்து வருவது அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

வேறுபாடுகளை களைந்து,ஒரு தேசத்தவர்களாக இணையும் அரசியல் கலாசாரத்துக்கு ஜனாதிபதியின் இந்த உழைப்புக்கள் வழிகோலலாம்.ஆனால், இந்த உழைப்புக்கு உரமூட்டும் பொறுப்புக்கள் சிறுபான்மை சமூகங்களிடமே உள்ளன. குறிப்பாக தமிழர் தரப்புக்கு இதில்,சில வரலாற்றுப் பொறுப்புக்கள் உள்ளன.கடந்த கால எந்த முயற்சிகளாலும் (ஆயுதம்,அஹிம்சை) வெல்லப்படாதுபோன இலட்சியத்தை (தீர்வு) தட்டில் வைத்து தருவதற்கு ஜனாதிபதி எடுக்கும் முயற்சியை தட்டிவிட முடியாது. எனவே,இவ்விடயத்தில் தமிழ் தரப்புக்கள் பொறுப்பதாரிகளாகப் பணியாற்றுவது அவசியம்.

சிறுபான்மையினரின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் எவ்விதப்பிடிக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அடிபணியாமல் சிந்திக்கும் தலைவர் ரணில்.இவ்வளவு காலமும் எட்டப்பட்ட முயற்சிகளை விடவும் ரணிலின் காலத்தில் முயற்சிக்கப்பட்டவை தான், தமிழர்களுக்கு ஓரளவாவது திருப்பதியளித்திருக் கிறது. 2002 முதல் 2004 வரை, இவரது அரசாங்கம் உச்சளவில் முயற்சித்து ஏதோவொரு தீர்வுக்கு தயாரானதை சர்வதேசமே அறியும். சர்வதேசத்தின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட அந்தக்கால (2002-2004) முயற்சிகள், தமிழ் ஈழத்துக்கான சாயலில் இருந்ததையும் மறப்பதற்கில்லை. இந்நிலையில், தமிழர் தரப்பின் எல்லைதாண்டிய செயற்பாடுகள் தென்னிலங் கையின் கண்களில் குத்தியதையும், ஆயுத அமைப்பு இரண்டாகப் பிளந்ததையும் கற்றுக்கொண்ட பாடங்களாக தமிழர் தரப்புக் கருத வேண்டும்.இருப்பினும், ஒருசில குறுக்கீடுகளால் ரணிலின் அரசாங்கம் 2004 இல் பதவியிழக்க நேரிட்ட கையோடு, தீர்வுக்கான காலங்கள் கைநழுவிப்போயின.

இந்தப் பாடங்களின் அடித்தளத்திலிருந்து, ரணிலுடன் பயணத்துக்கு தயாராவதே தமிழர் தரப்பின் சமயோசித அரசியலாகும். நாட்டின், இப்பபோதுள்ள நிலை, அவ்வாறு இல்லை. தென்னிலங்கையின் சகல அரசியல் தலைமைகளும் சமாதான தேசத்தையே விரும்புகின்றன. பேரினவாதத்தை அரசியல் முதலீடாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சக்திகளும், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களால் பல படிப்பினைகளைப் பெற்றுவிட்டன. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதைப்போல், நமது நாட்டுக்கு வந்துள்ள பசி, பலரது முகத்திரைகளையும் கிழித்திருக்கிறது.

எனவே,ரணிலின் தீர்வுக்கான அறிவிப்பைப் பயன்படுத்த முனைவதே தமிழர் தரப்புக்குள்ள வழி. அடுத்த சுதந்திர தின வைபத்தில், எல்லோருக்கும் விடிவு பிறக்கப் புறப்படு வதே புத்திசாதுர்யமான வியூகம்.ஆனாலும், பட்ஜட் விவாதங்களில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதங்கள், வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் உள்ளூரவுள்ள இடைவௌிகள் குறைந்ததைக் காட்டுவதாக இல்லை. இது, தமிழ் புத்திஜீவிகளுக்குள் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது

ஒரே,தேசியத்துக்காக குரலெழுப்பும் இந்த தமிழ் எம்பிக்கள், தீர்வுக்காக ஒன்றுபடுவார்களா? இந்த ஐய்யத்தை, களையும் அவசியம், தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, களைய முடியாதுபோயின், கடந்த காலங்களைப்போன்று, கை கூடியுள்ள இந்தக் காலமும் கடந்தோடிவிடும். இவ்வாறு சுமார் ஐம்பது வருடங்கள், கை கூடாமல் காலங்கள் கடந்ததால்தான் தமிழர்களின் தலைவிதி இவ்வாறு எழுதப்பட்டுவிட்டது. தங்களுக்குள் தீர்வில்லாமல், தாமாக ஒன்றுபடாமல் தென்னிலங்கை அரசியல் தலைவர்களை விமர்சிப்பது, தமிழினத்தை இன்னும் ஏமாற்றவே உதவப்போகிறது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, சகலரையும் ஒரு தேசத்தவர் என்ற இலட்சியத்தில் இணைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கூறியுள்ளார்.இவ்விடயம் தமிழர் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வை முன்வைக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளதால்,தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வைத் தயாரிக்க முயற்சிக்கின்றன. இதற்காக, மிக விரைவில் தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடவுமுள்ளன. இதற்குள், பட்ஜட் வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகித்தது ஏன்? ஆதரவளித்து, இணங்கிச் செல்வதற்கான சமிக்கையை காட்டியிருக்கலாம்.

பயங்கரவாதத் தடைச்சட்டம், கைதிகள் விடுதலை,காணிகள் விடுவிப்பு இன்னும் எத்தனையோ இருக்கையில் எவ்வாறு ஆதரிப்பது.? யுத்தமே இல்லாத இன்றைய சூழலில்,பாதுகாப்புச் செலவினங்களுக்கு இவ்வளவு தொகையை இந்த பட்ஜட் ஒதுக்கியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் ஆசீர்வாதத்தில் உள்ள ரணிலுக்கு, ஆதரவளிப்பது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் என்றெல்லாம் வியாக்கினங்கள் வழங்க சிலர் விழைகின்றனர்.

இந்த வியாக்கியானங்களை,ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் கசப்பான அனுபவங்களுக்குட்படுத்தி ஆராய்வதில்தான் விடிவுக்கான பாதைகள் உள்ளன. தமிழ் தரப்பில்,எதிரும்,புதிருமான அரசியல் அதிகரித்து ஆரோக்கிய நகர்வுகளுக்கு குறுக்காக நிற்கும் இன்றைய கள நிலவரத்தில், எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைக்க முனைந்திருப்பது மாத்திரம்தான், தமிழர்களைj ஆறுதல்படுத்துகிறது. இந்த ஆறுதல்கள் ஆற்றாமைகளாகிவிடக்கூடாது. இதுதான், தமிழர்களின் ஆதங்கம்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments