Sunday, 27 November, 2022
yaraglobal
Homeகட்டுரைசிறப்பு கட்டுரை: இலங்கையில் மக்கள் பிரச்சனை என்பது இப்போது மறந்த கதை

சிறப்பு கட்டுரை: இலங்கையில் மக்கள் பிரச்சனை என்பது இப்போது மறந்த கதை

குணா – Ceylonsri.

** கூட்டணி அமைப்பதிலும் கட்சி வளர்ப்பதிலும் அரசியல் கட்சிகள் மும்மூரம்

** சகல கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் குதிப்பு

** அரசியல்வாதிகளுக்கெல்லாம் அதிகார அரசியலை கைப்பற்றுவது தான் இப்போது தலைமேல் உள்ள பிரச்சினை

மக்கள் பிரச்சனை என்பது மறந்த கதை ஆகிவிட்டது. நாடும் மக்களும் இன்று எதிர்கொள்கின்ற பிரச்சனைகளும், நெருக்கடிகளும் தொலைக்காட்சி விவாதங்களோடும், பாராளுமன்ற விவாதத்தோடும் முடிவடைந்து விடுகின்றன.
ஒரு நேர சாப்பாட்டுக்கே மக்கள் அல்லல்படுகின்ற நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடும் இதனால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையும் உலகறிந்த விடையங்கள் ஆகிவிட்டன.

நமது நாட்டுக்காகவும் நமது மக்களுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கின்ற நிலையில், நம் நாட்டு அரசியல்வாதிகள் எதனைச் செய்ய துடிக்கிறார்கள்….?

வரிசை கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக நாடும் மக்களும் நிம்மதி அடைந்து விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. வரிசையில் நிற்கும் கலாசாரத்தை உருவாக்கியவர்களே,அதனை இல்லாமல் செய்தார்கள் என்று சொல்லலாம். மக்கள் இதனை உருவாக்கவும் இல்லை ; வலிந்து இல்லாமல் செய்யவும் இல்லை. ஆனால் இன்று வாழ்க்கை செலவினால் துவண்டு கொண்டிருக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை.

எல்லாமே டாலர் நெருக்கடி என்று கூறுகின்றார்கள். இதற்கு இன்னும் தீர்வு தான் கிடைக்கவும் இல்லை. நாட்டில் பணம் வீக்கம் அதிகரித்து, அதனால், வாழ்க்கை செலவும் அதிகரித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கஷ்டங்களிலே மக்கள் துவண்டு கொண்டிருக்கின்றார்கள்.

இன்று அரசியல் கட்சிகள் படுகின்ற பாடு, மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, ஆட்சி அதிகாரத்தையும் அதிகார கதிரைகளின் பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறன.

போளின் கலாச்சாரத்தை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை மறு ப்பதற்கு இல்லை. ஆனால், அதனோடு அவரது பணி முடிந்து விட்டது என்பதல்ல அர்த்தம். அதிகாரம் இழந்து போய் கிடக்கின்ற தனது ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதில் அவர் கூடுதல் முனைப்பு காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் ஒன்றை எதிர்கொள்கின்ற வகையிலேயே ஜனாதிபதி உட்பட சகல அரசியல் கட்சிகளும் முனைப்போடு செயல்படுகின்றன என்பதே உண்மை. பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையிலேயே ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. கூட்டு அமைத்து பொது சின்னத்தில் போட்டியிடுவதிலும், கூட்டணி அமைப்பதிலும் பொதுவாக எல்லா கட்சிகளுமே இப்போது களத்தில் இருந்து செயல்படுகின்றன.

ஆனால், மக்கள் பிரச்சினை தான் பெரும் கவலையாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பாசாங்குக்கு மக்களை பற்றி பேசுவதாக காட்டிக் கொண்டு, கட்சி அரசியலிலே சகல கட்சிகளும் இறங்கி விட்டன. பிரதான எதிர்க்கட்சி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கியது போல் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊர் ஊராகச் சென்று மேடைகளிலே பேசி வருகிறார்..

மக்கள் பிரச்சினை பற்றித்தான் பேசுகிறார். என்றாலும், மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதாக காட்டும் ஒரு அரசியல் முன்னெடுப்பாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

இதே போல, அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜேவிபி, தனது இடதுசாரி அரசியலை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றது. மக்களுக்காக குரல் கொடுப்பதாக இவர்கள் காட்டிக்கொண்டாலும், அடுத்த கட்ட தேர்தலுக்கான தயாரிப்புகளிலேயே களம் இறங்கி இவர்களும் செயல்படுகின்றார்கள். மக்கள் ஒரு நேரம் உணவுக்கு கஷ்டப்படுகின்ற பொழுது, மக்களை பார்க்காமல் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இந்த கட்சிகள் காட்டிக் கொள்கின்றன. தேர்தல் ஒன்று வருகின்ற பொழுது, போஷாக்கின்மையும், வறுமையின் உச்சமும் அதிகரித்திருக்கும் என்பதுதான் யதார்த்தமாக தெரிகிறது.

சகல கட்சிகளும் எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி கூட்டணி அமைத்து செயல்படுவதிலும்,வாக்காளர்களை தன் வசப்படுத்துவதிலும் நேரடியாக ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

சோத்துக்கு அலைபவர்களும் உணவுக்காக தெருத்தெருவாக பிச்சை எடுப்பவர்களும் குழந்தைக்கு பால் வாங்க முடியாமல் தவிப்பவர்களும் நிமிடத்திற்கு நிமிடம் பெருமூச்சு விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் பிரச்சனையை தீர்ப்பதாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம், கூட்டணி அமைப்பதில் வரிந்து கட்டிக்கொண்டு தான் நிற்கிறார்கள்.

ஆகவே ஒரு விடயத்தை இங்கே சுருக்கமாக சொல்லலாம். அரசியல் கட்சிகளுக்கெல்லாம் இப்போது மக்கள் அல்ல பிரச்சனை ; அதிகார அரசியலை கைப்பற்றுவது தான் தலைமேல் உள்ள பிரச்சினையாக சுமந்து திரிகிறார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments