Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்திய உதவித் திட்டங்களை மேலும் துரிதப்படுத்த கலந்தாலோசனை

இந்திய உதவித் திட்டங்களை மேலும் துரிதப்படுத்த கலந்தாலோசனை

இந்திய அரசினால் நன்கொடை அடிப்படையிலான உதவித்திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படும் பௌத்த மத மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் யாழ்ப்பாணக் கலாசார நிலைய செயற்பாடுகள் ஆகியவற்றின் அமுலாக்கம் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இருவேறு பிரத்தியேக சந்திப்புகளை நேற்று (01) கொழும்பில் மேற்கொண்டிருந்ததாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண, உயர் ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் (அபிவிருத்தி ஒத்துழைப்பு) எல்டோஸ் மத்தியூ புண்ணூஸ், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அதிகாரிகள் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தனர். 

2020 செப்டெம்பர் 26ஆம் திகதி இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான விசேட நன்கொடையாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவித் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததுடன் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது 2022 மார்ச் 28ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும். பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென உயர் ஸ்தானிகரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் இச்சந்திப்பின்போது இணங்கியிருந்தனர். அத்துடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வணக்கஸ்தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரியக்கல மின் வசதிகளை அமைத்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பேச்சுக்களின்போது அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவீன வசதிகளுடனான இக்கலாசார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக அனுமதிப்பது குறித்த கூட்டு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
11 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கலாசார நிலையம் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பினை பிரதிபலிக்கும் சிறந்த உதாரணமாக உள்ளதுடன் இதில் இரு தள நூதனசாலை, 600க்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான வசதியினைக் கொண்ட கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் நிலையம், திறந்த அரங்கமாக பயன்படுத்தக்கூடிய வசதியுடனான பொது சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
மக்களை மையமாகக் கொண்ட இந்த நன்கொடைத் திட்டங்கள் ஊடாக மக்களின் நாளாந்த வாழ்வில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இந்தியாவின் திடசங்கற்பத்தினை சுட்டிக்காட்டுவதாக இந்த இரு சந்திப்புகளும் அமைகின்றன.
இலங்கை அரசினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதும் இலங்கையின் சகல சமூகங்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. இதுவரை இலங்கையில் இந்தியாவால் 85 நன்கொடைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களில் இலங்கையின்  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டமும் உளளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments