நாடு திரும்பியோரின் பிரச்சனை: யாழ் நடமாடும் சேவையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு

25

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வேளையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கச்சேரியின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும், நிகழ்வில் கலந்து கொண்டோரின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.

இதன்போது,நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.பி.எஸ்.சமன் குமாரி, இழப்பீட்டுக்கான அலுவலக பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம்.ஹசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள் தொடர்பானவை, வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றின.

Join Our WhatsApp Group