குஜராத் மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்து | பலி 141 ஆக அதிகரிப்பு ; பிரதமரின் பேரணி ரத்து

17

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பவ பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

141 பேர் உயிரிழப்பு: இன்று (அக் 31) காலை 8.30 மணி நிலவரப்படி 141 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குஜராத் தகவல் தொடர்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மோர்பி சட்டமன்ற உறுப்பினர் ப்ரிஜேஷ் மெஹ்ரா பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக பேரணியை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி இன்று சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் செல்வார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக நேற்றிரவு முதல்வர் பூபேந்திரா பட்டேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். எம்.பி.யின் உறவினர்கள் பலி: விபத்தில் ராஜ்கோட் எம்.பி. மோகன் குண்டாரியாவின் 12 உறவினர்களும் சிக்கி உயிரிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Join Our WhatsApp Group