தேர்தல் சட்ட விதிகளை சீர்திருத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தேர்தல் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை சீர்திருத்துவதற்காக குழுவொன்று தினேஷ் குணவர்தன தலைமையில் அப்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதை நான் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேனென எதிர்க்கட்சியின் பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: அதன் பின்னர் அரசாங்கம் மாறியதும் நல்லாட்சி அரசாங்கமும் தினேஷ் குணவர்தனவை பணிகளை தொடருமாறு கேட்டுக் கொண்டது. அதன் பின்னர் மொட்டு அரசாங்கம் வந்ததும் தினேஷ் குணவர்தனவிடம் பணிகளை தொடருமாறு கேட்டுக்கொண்டோம். சுருக்கமாகச் சொன்னால், தினேஷ் குணவர்தன 2012ஆம் ஆண்டு முதல் இன்று வரை பத்து வருடங்களாக தேர்தல் சட்ட விதிகள் சீர்திருத்தக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.தேவையான விதிகளை சீர்திருத்த அவருக்கு போதிய நேரம் காலம் இருந்தது.தேர்தல் சட்ட விதிமுறைகள் சீர்திருத்தக் குழுவின் தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, இரண்டாயிரம் பேர் அளவிலயே உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் அவர் நாலாயிரமாக்கி பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது எட்டாயிரமக்கினார். இப்போது மீண்டும் இந்த அரசாங்கம் அதன் பெருமானம் அதிகமாக உள்ளது,குறைக்க வேண்டும் என்று கூறுகிறது.
அதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை, ஆனால் தேர்தல் சட்ட விதிமுறைகள் சீர்திருத்தத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று கூறுகின்றோம்.உரிய நேரத்தில் நடத்த வேண்டும், செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு பின்,அந்த பணிகளை ஆரம்பிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைத்துள்ளது. பத்து வருடங்களாக தினேஷ் குணவர்தன தேவையான சட்ட விதிகளை சீர்திருத்தவில்லை என்று நான் கூறுகிறேன்.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வருவதால்,இந்த சட்ட விதிகளும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் 4000 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு கூறுகிறது. ஆனால் இது தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற அற்ப வேலைகள் மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று அராங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில் இந்நாட்டு மக்கள் மட்டுமல்ல சர்வதேச நாணய நிதியமும் புதிய மக்கள் ஆணை வேண்டும் என்று கேட்கிறது. ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி,அரசாங்கம் புதிய மக்கள் ஆணையை கோருவது நல்லது என தெரிவித்தார்.
இந்த அரசாங்கம், அரச வளங்களை பாதுகாப்போம் என்று கூறியே ஆட்சிக்கு வந்தது, ஆனால் இன்று அரச வளங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்யும் திட்டங்களை வகுத்து வருகின்றது. தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம், ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது போதும்.தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம். அதேபோன்று, இன்னும் சில நாட்களில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது,எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை கேட்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் நாம் கோருகிறோம்.
தேர்தல் ஆணைக்குழு இதுவரை நிதி கோரவில்லை என கேள்விப்படுகிறோம், எனவே நிதியை கோருமாறும்,மாவட்ட அளவில் தேர்தலை நடத்த தேவையான அதிகாரிகளை பணியமர்த்தும் பணியை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம்.
தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒரு மந்தமான மெதுவான போக்கை நாம் பார்க்க முடியும், ஆனால் தேர்தல் குறித்த நேரத்தில் நடக்கும் என்று பகிரங்கமாக ஆணைக்குழு கூறியுள்ளது.இது நல்ல போக்குதான் ஆனால் கூறுவது மட்டும் போதாது. அரசிடம் நிதி கேட்க வேண்டும்.மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அதேபோல்,இப்போது அரசாங்கம் பல புதிய வரிகளை முன்வைத்துள்ளது,ஆனால் அந்த வரிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அரசாங்கம் எங்களிடம் ஆதரவைக் கேட்கிறது.ஆனால் அவர்கள் இந்த வரிகள் தொடர்பாக எங்களுடன் கலந்துரையாடவில்லை,சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வரிகளை விதிக்க முயற்சிக்கின்றனர்.சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை முன்வைக்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தும் இன்று வரை அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மக்களுக்கு மட்டுமின்றி நிறுவனங்களும் தாங்க முடியாத வகையில் வரிவிதிப்பு முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.வரி விதிக்க வேண்டும், ஆனால்,குளவி பூவில் இருந்து தேன் எடுப்பது போல் பூவையே அழிக்காமல் இருப்பதாக அமைய வேண்டும்.இது தேனை எடுப்பது மட்டுமன்றி பூவையே அழிப்பதற்கு ஒப்பானது.
இந்த அரசாங்கம் ஏற்றுமதியாளர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் அழிக்கவே புதிய வரி திட்டங்களை முன்வைத்துள்ளது.எம்முடன் கலந்துரையாடாமல் இந்தப் பணியை மேற்கொள்ள முடியாது என அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.எதிர்க்கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளது.எமது ஆதரவினால் தான் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாரம்பரிய அரசியலை செய்திருந்தால் எதிர்த்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்பு திருத்தமே நாட்டுக்கு தேவை என சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை என்பன கூறுகின்றன. அதன்படியே நாட்டைப் பற்றி சிந்தித்தும், மக்களுக்காகவுமே ஆதரவளித்தோம். அரசாங்கத்திற்கு 172 வாக்குகள் கிடைத்தன, அதில் 90 எதிர்க்கட்சி வாக்குகள்.
எனவே,எதிர்காலத்தில் இந்த வரித் திருத்தங்களை எங்களுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முன்வைத்தால் அவற்றை கடுமையாக எதிர்ப்போம்.
ஏனெனில் இன்று எமது நாட்டு மக்கள் படும் துன்பங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.இலங்கை வரலாற்றில் 1948 ஆம் ஆண்டு முதல் பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த போதிலும் இவ்வாறு எமது நாட்டை எந்த அரசாங்கமும் வங்குரோத்தடையச் செய்யவில்லை.
இன்று ரூபாவே டொலரோ எதுவும் இல்லை. இந்த அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்த போது ஏழாயிரத்து எண்ணூறு பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியுடனையே நாட்டை ஒப்படைத்தோம்.மொட்டு நாட்டை வங்குரோத்தடையச் செய்ததன் காரணமாகவே இன்று இந்த அரசாங்கம் வரி விதிக்க வேண்டியுள்ளது.
பிரித்தானியா பிரதம மந்திரிக்கு என்ன நடந்தது? ஏன் போக வேண்டி ஏற்பட்டது.அவர் வந்ததும் இந்த பெரிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கினார்.அரசாங்கம் நிறைய வரிப்பணத்தை இழந்தது.பிரதமரை கேள்வி கேட்டது எதிர்க்கட்சிகள் அல்ல.பிரதமரின் சொந்த கட்சியே கேள்வி எழுப்பியது.அவர்களின் கட்சிக்காரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிமைகளாக இல்லை.பாடசாலைகளைகளையும் வைத்தியசாலைகளையும் நடத்திச் செல்ல எங்கிருந்து பணம் கிடைக்கும் என கேள்வி எழுப்பினர்,கடன் வாங்குவதாக அந்த பிரதமர் பதில் கூறினார்.
பின்னர் அவர் இராஜினாமா செய்ய நேரிட்டது, எனவே நடுத்தர மக்கள் நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளனர்,அதற்கு மேல் அவர்களை வீழ்வதற்கு இடமில்லை என்பதாலும் இந்த வரித் திருத்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதை நான் இந்த நேரத்தில் கூறுகின்றேன். இந்த அரசாங்கம் துர்நாற்றம் வீசுகிறது, காலாவதியானது, அதனால்தான் மக்கள் வெவ்வேறு திசைகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
எனவே தேர்தலை நடத்துங்கள்.அதன் மூலம் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியும். உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் கூறுகிறோம்