சஜித்தின் ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்- இராதாகிருஷ்ணன் எம்பி

12

(க.கிஷாந்தன்)
“மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்தவர்தான் அமரர். ரணசிங்க பிரேமதாச. அவரின் மகனான சஜித் பிரேமதாசவும் எமது மக்களின் மனங்களை அறிந்துவைத்துள்ளார். எனவே, அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிகாலத்தில்தான் ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி திறந்துவைக்கப்பட்டது. எமது மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைப்பதற்கு அவரின் பங்களிப்பு அளப்பரியது. இதனை ஒருபோதும் மறந்துவிடமுடியாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆண்டுவிழாவொன்றில் பங்கேற்பதற்காக ரணசிங்க பிரேமதாச ஹட்டன் வந்திருந்தார். அப்போது அடுத்த பிறவியில் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாக பிறக்க வேண்டும் என உரையாற்றியிருந்தார். எமது மக்களின் வலி, வேதனை ரணசிங்க பிரேமதாசவுக்கு புரிந்ததுபோல, சஜித்துக்கும் நல்ல தெளிவு உள்ளது. அதனால்தான் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முறைமையை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றார். காணி உரிமைக்காக குரல் கொடுக்கின்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றார். எமது கல்வி, சுகாதாரம், அரசியல் இருப்பு என்பன முறையாக இடம்பெற சஜித் இந்நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரவேண்டும்.” – என்றார்.

Join Our WhatsApp Group