- சம்பவம் தொடர்பில் அஜித் ரோஹண கண்காணிப்பில் விசேட விசாரணை
- மனித உரிமைகள் ஆணைக்குழு தனியான விசாரணை மாத்தறை, மிதெல்லவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் (57) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) மாத்தறை, திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதெல்லவல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் பொலிஸ் குழுவொன்றினால் சந்தேகநபர்கள் ஒருசிலரை சோதனையிடச் சென்ற வேளையில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த 15 வயதுச் சிறுவன் காலி, கராப்பிட்டி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய, குறித்த பொலிஸ் குழுவிற்கு பொறுப்பாக இருந்த, 57 வயதான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவின் கண்காணிப்பின் கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான விசெட பொலிஸ் குழுவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.- இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அஜித் ரோஹண, “இச்சம்பவத்தில் 15 வயதான சிறுவன் ஒருவனே காயமடைந்துள்ளார். இது தொடர்பில் நாம் விசேட விசாரணையை முன்னெடுத்துள்ளோம். இச்சம்பவத்தை ஒரு சாதாரண சம்பவமாக நாம் கருதப் போவதில்லை. அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்து உரிய சட்ட நடவடிகை எடுக்கவுள்ளோம். குறித்த உப பொலிஸ் பரிசோதகரை இன்றையதினம் (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.