T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை அணியை 65 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது. இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில்102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது
சிட்னியில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் (குழு -1) விளையாடின. இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் அலன் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் அலென் 1 ஓட்டம், கான்வே 1 ஓட்டம், வில்லியம்சன் 8 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 15 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் மிட்செல் 22 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த நீஷம் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென எகிறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்தது அந்த அணி தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ஓட்டங்கள குவித்தார்.
இந்நிலையில், இலங்கை அணி தரப்பில் கசுன் ரஷித 2 விக்கெட்டுக்களையும், தீக்ஷன, டி சில்வா, ஹசரங்க, லஹிரு குமார ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதனடிப்படையில் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் Trent Boult 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
துடுப்பாட்டத்தில் தசுன் சானக 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றிகொண்டது..