இதுவரை 300 ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளோம்: உக்ரைன்

22

கீவ்: ரஷ்யாவுடனான போரில் இதுவரை 300 ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைனின் விமானப் படை தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், “ரஷ்யாவுடனான இந்த 6 மாதங்களுக்கு மேலான போரில் ஈரானில் உருவாக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இதுவரை தாக்கி அழித்துள்ளோம். இந்த ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு முக்கியப் பாங்காற்றியுள்ளன. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ட்ரோன்கள் உதவியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ட்ரோன்களை ரஷ்யாவுக்கு தங்கள் நாடு ஏற்றுமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.

போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group