பாராளுமன்றத்தையும் நீதித்துறையையும் மோத விடுவதற்கு சுமந்திரன் முயற்சி செய்கிறாரா?

15

*தெரிவுக் குழு வேண்டும் என்கிறார் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார். சபாநாயகருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பி நீதி அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதி அமைச்சர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் (21ஆம் திருத்தம்) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்தை முன்வைத்து, குறித்த சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானம் சட்டத்திற்கு உட்பட்டது அல்லவெனவும், உயர்நீதிமன்றம் அடிக்கடி சட்ட நிலைப்பாடுகளை மாற்றி தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாகவும் இதனால் உச்ச நீதிமன்றத்தையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

அவரால் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கருத்து மூலம் உச்ச நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்ப்புக்கு எதிரானது என்பதுடன், அந்த தீர்ப்பு மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், உச்ச நீதிமன்றத்தை நடத்திச் செல்வது அவசியமற்றது என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய முறையாக முன்வைக்கப்படும் பிரேரணைகளை தவிர, நீதிமன்றம் தொடர்பாகவோ, நீதிபதிகள் தொடர்பாகவோ விமர்ச்சிக்கக் கூடாது.

இந்நிலையில் குறித்த எம்.பி.யின் கருத்தால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் இடையே மோதலை உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெளிவாவதுடன், அவர் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற வகையில் வெளியிட்ட அந்தக் கருத்தை எம்.பி என்ற வகையில் மேற்கொள்ளக் கூடாத ஒன்றாகும். குறித்த கருத்து மூலம் உச்ச நீதிமன்றம் உள்ளடங்கலாக நீதித்துறை தொடர்பில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாரதூரமான வகையில் பாதிப்படையும் என்பதுடன், அது பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்திச் செல்வதற்கு அச்சுறுத்தலாகவும் அமையும்.

எம்.பி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற வகையில், அவர் அவ்வாறான கருத்தை பாராளுமன்றத்திற்குள் கூறியுள்ளமை சமூகத்திற்கு வழங்கப்படும் தவறான முன்னுதாரணமாக அமையும். மறுபக்கத்தில் பாராளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமைக்குள் இருந்துகொண்டு குறித்த எம்.பி வெளியிட்ட கருத்து ஊடாக, பாராளுமன்றத்தின் அனைத்து எம்.பி.க்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலைமையை ஏற்படுத்தும் என்பதுடன், இது எம்.பிக்களின் சிறப்புரிமையை மீறுவதாகவும் அமையும்.

இதன்படி அவரின் கருத்து தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கையை பரிந்துரைக்கும் வகையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். சபாநாயகர் அந்த தெரிவுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் பிரகாரம் தெரிவுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 பேரைவிடவும் அதிகரிக்கக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்காக தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு எந்தவொரு நபரையும் அதன் முன்னிலையில் அழைப்பதற்கும் முடியும்.

தெரிவுக் குழுவின் அறிக்கையானது அதன் முதலாவது கூட்டம் நடைபெற்ற தினம் தொடக்கம் 3 மாதங்களுக்குள் அல்லது பாராளுமன்றத்தினால் நீடிக்கப்படும் கால எல்லைக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

Join Our WhatsApp Group