சான்ப்ரான்சிஸ்கோ: உலகின் மிகபெரிய சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் அந்த டீல் முடிந்த பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பறவை சுதந்திரம் பெற்றது என்று ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் சமூகவலைதளத்தின் லோகோவாக நீல நிற பறவை இருக்கிறது. இதனை ஒட்டியே ட்விட்டர் நிறுவனம் தன்வசம் வந்துவிட்டதால் பறவை சுதந்திரம் பெற்றதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது. அவர் மட்டுமல்ல ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.
ட்விட்டரைக் கைப்பற்றிய பிறகு, அதில் பிரதானமாக மூன்று மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக ஏற்கெனவே சொல்லி வந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்துரிமை பேணப்படவில்லை என்பது மஸ்க்கின் முதன்மையான குற்றச்சாட்டு.
உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள், வசைகளை உள்ளடக்கிய ட்வீட்களைப் போலியானவை என்று அம்பலப்படுத்துதல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தணிக்கை நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளார்.
ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக இல்லாத எந்த ஒரு கருத்துக்கும் ட்விட்டரில் இடமளிக்கப்பட வேண்டும் என்கிறார் மஸ்க். கருத்து/பேச்சு சுதந்திரத்தின் முற்றுமுழுதான ஆதரவாளர் என்று தன்னை முன்வைக்கிறார். ஆனால் இவற்றையெல்லாம் எப்படி செயல்படுத்துப் போகிறார் என்பதற்கான செயல்திட்டம் எதையும் அவர் இதுவரை தெரிவிக்கவே இல்லை.