ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது வழங்கும் விழா

19

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 2022 அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (28) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலைப் பேரவை, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 65ஆவது அரச இலக்கிய விருது விழாவில் 40 “அரச இலக்கிய விருதுகளும்” 03 “சாகித்ய ரத்ன” விருதுகளும் வழங்கப்பட்டன. பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு (சிங்களம்), சிரேஷ்ட பேராசிரியர் கமனி ஜயசேகர (ஆங்கிலம்) மற்றும் டீ .ஞானசேகரன் (தமிழ் ) ஆகியோர், ஒரு கலைஞருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதியினால் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எரிக் இளையப்ஆரச்சியின் “நகுல முனி” நாவலும் (சிங்களம்),  பிரேமினி அமரசிங்கவின் “Footprints” (ஆங்கிலம்) மற்றும் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” (தமிழ்) நாவலும் சிறந்த நாவல்களாக விருது பெற்றன.
2022ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது விழாவுக்காக வெளியிடப்பட்ட நினைவுப் பதிப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அரச இலக்கிய சபையின் தலைவர் வண.ரம்புக்கண சித்தார்த்த தேரர், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோருடன், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group