இலங்கைக்கு 5 இலட்சம் நீரிழிவு மாத்திரைகளை வழங்கியது புதுச்சேரி

35

புதுச்சேரி: பொருளாதார வீழ்ச்சியில் மருந்து தட்டுப்பாடு இலங்கையில் நிலவும் சூழலில், புதுச்சேரி அரசு சார்பில் இலங்கைக்கு 5 இலட்சம் நீரிழிவு மாத்திரைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரிக்கு இன்று வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தி்த்தார். அப்போது பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, புதுச்சேரி அரசு சார்பில் இலங்கை வாழ் மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகளை முதல்வர் வழங்கினார்.

இதுதொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் கூறுகையில், “புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் நட்புறவு உண்டு. முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பொருளாதார வீழ்ச்சியில் மருந்து தட்டுப்பாடு நிறைய இருப்பதாக தெரிவித்தேன். அதையடுத்து நீரிழிவு நோயாளிகளுக்கு 5 லட்சம் மாத்திரைகளை வழங்கினார். இலங்கை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதுச்சேரி அரசுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் நன்றி” என்று குறிப்பிட்டார்.

Join Our WhatsApp Group