22: மக்களை ஏமாற்றி இருக்கும் மழுப்பல் சட்டம்

178

** 22 ஆவது திருத்தம் 21 ஆவது திருத்தமாகவே உள்வாங்கல்

** நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றமே இல்லை
** மொட்டுக் கட்சியின் பிளவையும் அம்பலப்படுத்தி இருக்கிறது

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. கடுமையான இழுபறிக்கும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு, 21.10.2022, வெள்ளிக்கிழமை அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரே ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

மொட்டு கட்சியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மாத்திரம் இந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்து இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதியும் பொது சன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்சே வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர்களான ரோஹித அபேய குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் உட்பட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் திடீரென சபையிலிருந்து மாயமானார்கள்.

எந்த வகையிலும், இவர்களது பங்களிப்பு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருக்கவில்லை. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களாக இருக்கின்ற முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார்கள். இவர்கள் இருவரினரும் அதிரடியான இந்த வாக்களிப்பு, மொட்டுக் கட்சிக்குள் இருக்கின்ற கொள்கை நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கின்ற வேறுபாட்டை காட்டுகின்றது.

அதே நேரம், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 22 ஆவது திருத்தத்தை நிபந்தனைகளுடன் ஆதரித்தது. சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற சட்டமூலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பதே அவர்களது நிபந்தனையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு எம்பிக்கள், 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.ஏனைய உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் இப்பொழுது சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது 21 வது திருத்தமாகவே அரசியலமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.

21 வது திருத்தமாக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை உச்ச நீதிமன்றத்தினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், 22 ஆவது திருத்தமாக முன்வைக்கப்பட்ட சட்டம் மூலம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால், 22 ஆவது திருத்தம் 21ஆவது திருத்தமாக அரசியலமைப்பிலேயே சேர்க்கப்படுகின்றது.

இரட்டை பிரஜா உரிமை நீக்குதல், சுதந்திர ஆணை குழுக்களை மீண்டும்
நியமித்தல், பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் இரண்டரை வருடங்களாக மாற்றம், அமைச்சரவையின் எண்ணிக்கை 30, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 உட்பட முக்கிய சில மாற்றங்கள் 22 ஆவது திருத்தத்திலே உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அரச உயர் பதவிகளிலும் இருக்க முடியாது. நல்லாட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19வது திருத்தம் இதனை உள்வாங்கி இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், கோட்டா பய ராஜபக்ச தலைமையில் உருவான அரசாங்கம், 19ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து,இருபதாவது திருத்தத்தை கொண்டு வந்தது. இந்த இருபதாவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜா உரிமை சரத்து முற்றாக நீக்கப்பட்டது.

பசில் ராஜபக்சவை மையமாகக் கொண்டு இந்த திருத்தத்தை அவர்கள் முழுமையாக நீக்கினார்கள் என்பது வரலாறு. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உருவாகியிருக்கும் இந்த புதிய அரசாங்கம், அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் இந்த இரட்டை பிரஜா உரிமை விடயத்தை உள்ளடக்கி உள்ளது.

இரட்டை பிரஜா உரிமை விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், செயல்படுகின்ற மொட்டுக் கட்சிக்குள் பிளவு பட்ட நிலை காணப்பட்டது. பசில் ராஜபக்ஷவின் விசுவாசிகள் ஒருபுறமும் ஏனையவர்கள் இன்னொரு புறமுமாக கட்சி இரண்டாக பிளவு பட்டிருந்தது. இந்த நிலையில், பசில் ராஜபக்சவை முழுமையாக நேசிக்கின்ற மொட்டு கட்சியினர் வாக்கெடுப்பு நேரத்தில் திடீரென மறைந்து விட்டனர். அதாவது, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மொட்டுக் கட்சியில் ஏற்பட்டிருக்கின்ற பிளவு நிலையை வாக்களிப்பின் போது நாடு வெளிப்படையாக அறிந்து கொண்டது.

பசில் நாட்டுக்காக பணியாற்றுவதாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இலங்கையில் இருந்து செயல்பட முடியுமென மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர் வெளிப்படையாகவே கூறினர். அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜா உரிமையை தியாகம் செய்து களத்தில் இறங்கினார். இதன் மூலம்,தான் இலங்கைப் பற்றாழன் என்பதை கோட்டா பய ராஜபக்ஷ நிருபித்தார்.

என்றாலும், நாடு பௌத்தம், சிங்கள மக்கள் என்று பெரும்பான்மை வாதத்தை மக்களுக்குள் இனவாதமாக திணித்த பசில் ராஜபக்ஷ, இந்த நாட்டுக்காக, அமெரிக்க பிரஜா உரிமையை இழப்பதற்கு இன்னும் தயாராக இல்லை.

அதிகாரத்தை பிடிப்பதற்கு நாட்டுப்பற்றையும், மத வாதத்தையும் தாரக மந்திரமான கொள்கையாகக் கொண்டுள்ள பசில், அமெரிக்க பிரஜா உரிமை பெற்ற நிலையிலே சகல விடயங்களையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறார். இதற்கு அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டிருக்கும்,21 ஆவது திருத்தம் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்ற பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதே போல, அரசாங்க சேவையில் அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீன தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருந்த அரசமைப்பு பேரவை, (Constitutional Council) 21 வது திருத்தத்தின் மூலம் மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷவினால், கொண்டுவரப்பட்ட இருபதாவது திருத்தத்தில், இது நீக்கப்பட்டு, நாடாளுமன்ற பேரவை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப் பேரவைக்கு ஜனாதிபதியே பிரதிநிதிகளை அல்லது உறுப்பினர்களை பரிந்துரைப்பார்.

22 ஆவது திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த அரசமைப்பு பேரவையானது, சுதந்திர ஆணைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும். நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு கூட தனது உறுப்பினர்களை பரிந்துரை செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அதனை நிராகரிக்கின்ற அதிகாரம் அரசமைப்பு பேரவைக்கு இருக்கிறது.
இந்தத் திருத்தங்களின் கீழ், மத்திய வங்கி ஆளுநரை கூட, அரசமைப்பு பேரவையே தீர்மானிக்கும்.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, 19,20,21(22) வது திருத்தங்களின் கீழ் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், அரசியலமைப்புக்கான இந்த 22 ஆவது திருத்தம், மக்களின் தன்னெழுச்சையினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று வெளிப்படையாக சொல்லலாம். ஆனால், அந்த மக்களின் எதிர்பார்ப்பு இந்த திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வி, கேள்வியாகவே தொடர்கின்றது.

இலங்கையின் அரசியல் அமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் தன் எழுச்சி கோரிக்கையாகும். 22 ஆவது திருத்தம் அதனை முழுமையாக செய்யவில்லை என்பது கவலை தரும் விடயம். மக்களின் தன் எழுச்சி போராட்டம் உச்சம் அடைந்திருந்த நிலையில், பதவியை விட்டுக் கொடுக்காத கோட்டா பய ராஜபக்ஷ, அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதற்கு உடன்பட்டு கொண்டார். அதற்காக விஜயதாஸ ராஜபக்ச தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. ஆனால், அரசியலமைப்பை மாற்றுவதற்கு பதிலாக, அரசியலமைப்பில் சில திருத்தங்களே செய்யப்பட்டு இருக்கின்றன.

நிறைவேற்றப்பட்டிருக்கின்ற அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம், மக்களின் கோரிக்கையை எந்த வகையிலும் திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலமைப்பை திருத்துவதற்கு உடன்பட்ட, கோட்டா பய ராஜபக்சே இப்போது அதிகாரத்தில் இல்லை. நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் தான் இந்த திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு நிறைவேற்று அதிகாரமும், தவறான முகாமைத்துவமும் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இருபதாவது திருத்தத்தின் மூலம் அதிகாரத்துக்கு மேல் அதிகாரத்தை சேர்த்துக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, தன்னால், சுமக்க முடியாத சுமையை தலையில் சுமந்து மாட்டிக்கொண்டார். அதன் பிரதிபலனை இன்று நாடு எதிர்கொள்கின்றது.

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நிறைவேற்ற அதிகாரத்தையும் இல்லாது ஒழிக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு கோட்டாபய ராஜபக்ச தள்ளப்பட்டார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இலங்கையின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு முழுமையாக உடன்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு 22 ஆவது திருத்தத்தையே சபையில் சமர்ப்பித்தது.

இந்தத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் எதுவும் முழுமையாக குறைக்கப்படவில்லை. கோட்டா தலையில் வாரி போட்டுக் கொண்ட நிறைவேற்று அதிகாரத்தின் சில சரத்துக்கள் இந்த திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய நிறைவேற்று அதிகாரத்தில் இந்த மாற்றமும் ஏற்படவில்லை.

22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் ரணில் தலைமையிலான அரசு இருந்தாலும், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்ற விடயத்தையும் நாம் சொல்லியே ஆக வேண்டும்.

நாட்டுக்குத் தேவை இன்று, அரசியலமைப்பு மாற்றம். அதற்கு தயார் இல்லாத நிலையில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டிருக்கின்ற 22 ஆவது திருத்தத்தை வைத்து கொண்டு, பொதுசன பெரமுன அதாவது,மொட்டு கட்சியினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல அழுத்தங்களை கொடுத்தனர். மக்கள் செல்வாக்கு இழந்து இருக்கின்ற இந்த மொட்டு கட்சியினர், இழந்த செல்வாக்கை மீள பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவை பயன்படுத்துவதற்கு முழுமையாக முயற்சி செய்தனர். (இப்பொழுதும் அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டதாக இல்லை) ஜனாதிபதி இதற்கு முழுமையாக உடன்படாத நிலையில், 22 ஆவது திருத்தச் சட்டம் சபையில் நிறைவேற்றப்படுவதை இழுத்தடிப்பு செய்வதில் மொட்டு கட்சியினர் மிகவும் கடுமையான செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 22 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்கு சகல கட்சிகளும் முன்வந்த நிலையில், மொட்டுக் கட்சியின் சதி நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன என்று தான் சொல்ல வேண்டும். நாட்டு நலனுக்காக அல்ல தனது கட்சியினதும் தனது தலைவர்களினதும் செல்வாக்கையும் ஆசனங்களையும் நிலை நிறுத்துவதற்கு ஏதுவாகவே மொட்டு கட்சியினர் செயல்பட்டனர்.

ஆளும் கட்சியாக இருக்கின்ற இந்த பொதுசன பெரமுன, பிளவுபட்ட நிலையிலேயே 22 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்திருக்கின்றனர் . இதன் மூலம், ஓர் உண்மை வெளியாகியது. நாட்டுக்காகவும் அல்ல நாட்டு மக்களுக்காகவும் அல்ல, பசில் என்ற ஒரு தனி நபருக்காக அரசியல் அமைப்பை மாற்றுவதை தடுக்க முற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

ஆகவே, 22 = 21, என்ற இந்த திருத்தம், மக்கள் நலம் சார்ந்த ஒரு திருத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிப்படையாகச் சொன்னால், 22 ஆவது திருத்தமானது மக்களை ஏமாற்றி இருக்கின்ற ஒரு மாயமானாகவே பார்க்க முடிகின்றது.மக்களை ஏமாற்றி இருக்கின்ற ஒரு மாயமானாகவே பார்க்க முடிகின்றது.
குணராசா – Ceylonsri

Join Our WhatsApp Group